கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அரவக்குறிச்சி பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது எம்பி ஜோதிமணி உடன், அப்பகுதியை சார்ந்த பொது மக்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜோதிமணி, ’’மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலைத் திட்டம் கிராமப்புறங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
100 நாள் வேலை திட்டம் வழங்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் 70 மற்றும் 80 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறதா, முறையாக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து இந்த வருடம் 70 ஊராட்சியில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 100 நாள் வேலை திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் அரசுப் பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றோம். 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு முறையாக பணம் கொடுப்பதில்லை குறிப்பாக இரண்டு லட்சத்து 10 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டிய நிதிக்கு பதிலாக, வெரும் அறுபதாயிரம் கோடி மட்டும் நிதி ஒதுக்கப்படுகிறது’’ என்று குற்றம் சாட்டினார்.
100 நாள் வேலை திட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக பணம் பற்றாக்குறைவாக இருந்து வரும் நிலையில் அடுத்த ஆறு மாதத்திற்கும் இதே நிலைதான் நீடிக்கும் நிலை நரேந்திர மோடி ஆட்சியில் உள்ளது. மோடி ஆட்சியில் 24 லட்சம் கோடி ரூபாய் கடனாக இருந்து வருகிறது. உடனடியாக 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்’’ என கோரிக்கை வைத்துள்ளார்.
ஆளுநர் மாளிகையின் முன்பு வெடிகுண்டு வீசிய சம்பவம் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, ''தமிழ்நாட்டில் சர்ச்சைக்குரிய நபர் ஆளுநர். ஆளுநர் மாளிகையின் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் இழக்கும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார். பாஜகவில் அண்ணாமலை ஆளுநரா? ஆளுநர் ரவி ஆளுநரா? தமிழகத்தை பொறுத்தவரை ஆளுநர் அலுவலகம், பாஜக தலைமை அலுவலமாக செயல்பட்டு வருகிறது.
சாலையில் வீசிய வெடிகுண்டை, பொறுப்பற்ற முறையில் ஆளுநர் மாளிகையின் உள்ளே வீசியதாக ட்வீட் செய்தது கண்டனத்துக்குரியது. அரசியல் சாசனப்படி ஆளுநரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று தமிழக மக்கள் முடிவெடுப்பார்கள்’’ என்று எம்.பி. ஜோதிமணி தெரிவித்தார்.
பின்னர் எம்.பி. ஜோதிமணி வந்த கார் பழுதடைந்தது. எனினும் அடுத்த நிகழ்வுகளுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்ததால் வேறு வாகனம் இல்லாததால் அவர் இருசக்கர வாகனத்தில் ஏறி புறப்பட்டு சென்றார்.
Join Us on Telegram: https://t.me/abpdesamofficial