எல்லா மருத்துவமனைகளிலும் மூன்று மாதம் மருந்து, மாத்திரைகள் இருப்பு இருக்க வேண்டும் என்று கரூரில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் பிரபுசங்கர் பேசினார்.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சுகாதாரத்துறை பணிகள் மற்றும் மகப்பேறு மரணம், குழந்தை மரணம் குறித்தான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சார்பில், பல்வேறு கருத்துக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து ஆய்வு குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது,
ஆய்வின் போது, மணப்பாறையில் ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு கர்ப்பிணி பெண்கள் மகப்பேறு காலத்தில் மரணம் அடைந்தது கண்டறியப்பட்டு, இந்த மாதமும் நடைபெற்ற மரணம் கண்டறியப்பட்டு, இரண்டு கர்ப்பிணி பெண்களும் அந்த மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த செவிலியர்கள் ஆகும். இதே போல் தொடர்ந்து மகப்பேறு மரணம் நிகழா வகையில் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடும்ப நல அறுவை சிகிச்சைகள் நடைமுறைப்படுத்தாமல் இருப்பதும் கண்டறியப்பட்டு, அரசின் வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாமல் இருப்பதையும் ஆய்வு செய்து, மருத்துவமனை நிர்வாகத்தின் விசாரணை மேற்கொள்ள கலெக்டர் பிரபுசங்கர் அறிவுறுத்தினார்.
மேலும், மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு, எல்லா மருத்துவமனைகளிலும் குறைந்தது மூன்று மாத இருப்புகள் இருப்பதை அந்தந்த மருத்துவர்கள் உறுதி செய்து கொள்ளவும், வரும் மழைக்காலங்களில் ஏற்பட க்கூடிய காய்ச்சல் , டெங்கு பணிகள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல் குழந்தை மரணம் குறித்தும், ஒவ்வொரு குழந்தை பிறந்த பின்பும், பிரசவகால பின் கவனிப்பு 48 நாட்கள் வரை, கட்டாயம் கிராம சுகாதார செவிலியர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும், கரூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்படும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், தொற்றா நோய்கள் கண்டறிவது மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. கருவுற்ற தாய்மார்களுக்கு, ரத்த சோகையினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து, ஆய்வு செய்து அவற்றை சரி செய்வது குறித்தும், ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசன், இணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஞானக்கண் பிரேம் நிவாஸ், துணை இயக்குனர் சந்தோஷ் குமார், குடும்ப நல இயக்குனர் தேன்மொழி உட்பட அனைத்து மருத்துவர்களும் கலந்து கொண்டனர்.
28 விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
கரூர் மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி காலை 11 மணிக்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்க உள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம். இத்தகவல் கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.