தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும்

 

மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தை உலகம் மறந்திருக்காது. இந்தி திணிப்பிற்கு எதிரான மீண்டும் அப்படி ஒரு போராட்டத்தை நடத்தவும் தமிழர்கள் தயங்கமாட்டார்கள் என திமுக எம்.பி. கனிமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

சென்னை பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாற்றுத்துறை சார்பில் பேராசிரியர் அ.கருணானந்தனின் பெரியாரியல் அறக்கட்டளை சொற்பொழிவு (2022 - 23) நடைபெற்றது. இதில் திமுக எம்.பி கனிமொழி, தமிழ்நாடு அரசு சமூகநீதி கண்காணிப்பு குழு தலைவர் பேராசிரியர்  சுபவீரபாண்டியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கெளரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய எம்.பி கனிமொழி: இந்த காலகட்டத்தில் பெரியார், அம்பேத்கரை பற்றி தெரிந்துள்ள வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலை உருவாக்கியுள்ளவர்களுக்கும், பெரியாருக்கு எதிரான கருத்துகளை கொண்டவர்களுக்கு நன்றி. பள்ளிக்கூடங்களில் நாம் எதை தாண்டி வந்துள்ளோம் எத்தகைய போராட்டங்களை கடந்து வந்துள்ளோம் என மாணவர்களுக்கு சொல்லி தராததால்,  இடஒதுக்கீடு, சமுக நீதியால் வளர்ந்த மாணவர்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசுகின்றனர்.  சமூகநீதி, இடஒதுக்கீடு மூலம் வளர்ந்த சில தலைவர்கள் கூட அதை உணர்வதில்லை.

 

இந்த சமூகத்தை திருத்துவதற்கும், மாற்றுவதற்கு இங்கு இருக்கும் யாரும் முன்வரவில்லை. அதனால் சமூகத்தை திருத்தும் வேலையில் ஈடுபட்டார் பெரியார். குறைந்தபட்சம் வாக்கு கேட்டு கூட வரவில்லை, இந்த சமூகத்திற்காக தனது சொத்துக்களை வழங்கி வாழ்நாளை அர்ப்பணித்தவர். எதையெல்லாம் புனிதம் என கட்டமைத்தார்களோ அதையெல்லாம் உடைத்தவர். ஜனநாயகத்தில் மாற்றுக்கருத்துகள் இருக்கவே கூடாது என்ற நிலைக்கு கொண்டுவந்துள்ளனர். சிலர் பாஜக கொள்கைகளை விதைத்து விடலாம் என நினைத்து விடுகிறார். சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கெளரி தனது மோதிரத்தில் கடவுள் படம் வைத்துள்ளார், செல்போனில் கடவுள் படம் வைத்துள்ளார். ஆனால் பெரியார் கொள்கைகளை பேசுகிறார், சென்னை பல்கலைக்கழகத்தில் சமூகநீதி குறித்த பாடத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இதுதான் தமிழ்நாடு, இதனை பாஜகவினரால் ஒரு நாளும் இதை புரிந்துகொள்ள முடியாது.

 

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும், மீண்டும் இந்தி திணிப்பை எதிர்க்கும் நிலையில் உள்ளோம். மொழிக்கான போராட்டம் ஒருநாளும் நீர்த்துபோகவில்லை. மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தை உலகம் மறந்திருக்காது, மீண்டும் அப்படி ஒரு போராட்டத்தை நடத்தவும் தமிழர்கள் தயங்கமாட்டார்கள், அப்படி ஒரு நிலை ஏற்படுத்தி விட வேண்டாம்.

 

இதனை தொடர்ந்துமேடையில் பேசிய சுப.வீரபாண்டியன் கூறுகையில்: பெரியார் எப்போதும் தனிப்பட்ட முறையில் யாரையும் எதிரியாக கருதவில்லை. ராஜாஜிக்கும் பெரியாருக்கும் இடையிலான நட்பு தனிப்பட்ட ரீதியிலானது, அவர்களுக்குள்ளான சண்டை கொள்கை அடிப்படையிலானது. தற்போது உள்ளவர்கள் தனிபட்ட முறியில் வெறுப்புணர்வு கொண்டவர்களாக உள்ளனர். பெரியார் தனக்கு செலவு செய்யும் போது கஞ்சனாகவு, சமூகத்திற்கு செலவு செய்யும் போது வள்ளலாகவும் திகழ்ந்தார்.இவ்வாறு அவர் கூறினார்.

 

நிகழ்ச்சியின் முடிவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கனிமொழி: தூத்துக்குடியில் நடந்த தூப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக நிவாரணம் வழங்கியது. பல நாள் முயற்சிகளுக்கு பிறகு துப்பாக்கிச்சூடு குறித்த அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிச்சயமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.