கரூர் மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான திருநங்கையர் விருது வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
திருநங்கையர் தினமான ஏப்ரல் 15 அன்று ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசால் திருநங்கையர் விருது வழங்கப்பட உள்ளது. 2024-2025ஆம் ஆண்டுக்கான விருதுக்கு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த திருநங்கையர் விண்ணப்பிக்கலாம் . இச்சமூகத்தில் தாங்கள் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையிலும் மற்ற திருநங்கையர்களை ஊக்குவிக்கும் வகையிலும் திருநங்கையர் தினமான ஏப்ரல் 15ஆம் தேதி அன்று ஒவ்வொரு ஆண்டும் திருநங்கையர்க்கான முன்மாதிரி விருதானது ரூ.1,00,000/- காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றுடன் வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டுக்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதானது திருநங்கையர் தினமான ஏப்ரல் 15ஆம் தேதி வழங்கப்பட உள்ளதால் இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் விருதுகள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 10.02.2025 வரை இவ்விருதுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். இணையதளத்தின் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே விருதுக்கு பரிந்துரைக்கப்படும்.
இவ்விருதுக்கான விதிமுறைகள்:
1. திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும்.
2. குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உதவியிருக்க வேண்டும்.
3. திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.
மேலும் இவ்விருது தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு விவரம் தெரிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண்-04324-255009 என்ற எண் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கூறியுள்ளார்.