அண்ணா பல்கலைக்கழக சம்பவம்; எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம்..


தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் குற்ற விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக புதன்கிழமை(08.01.24) நடந்த சட்டப்பேரவை கூட்டத்தின்போது, யார் அந்த சார் என்ற வாசகம் இடம்பெற்ற கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் அவைக்கு வந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புதனன்றும் அவைக்கு வரவில்லை. இந்நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தலைமையிலான அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கவன ஈர்ப்பு தீமானத்தை கொண்டுவந்தன.


அதிமுகவில் '100 சார்கள்' - மு.க. ஸ்டாலின்




எதிர்க்கட்சிகளின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விளக்கமளித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாலியல் விவகாரம் தொடர்பாக குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டதாகவும், விசாரணை வேகமாக நடைபெற்று, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அதிமுகவினர் என்று சாடியவர், அதிமுகவின் 100 சார்கள் பற்றி தன்னால் கேள்வி கேட்க முடியும் என்றும் பேசினார். அதோடு நிற்காமல், அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு சாட்சி பொள்ளாச்சி என்றும் கடுமையாக விமர்சித்தார். மேலும், அரசை களங்கப்படுத்த நினைக்கும் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது என்றும் கூறினார்.


அதிமுகவினர் வெளிநடப்பு; முதல்வரை விளாசிய ஆர்.பி. உதயகுமார்




கவன ஈர்ப்பு தீமானத்தின் மீதான விளக்க உரையின்போது அதிமுகவை முதலமைச்சர் கடுமையாக விமர்சித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ-க்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டடு, வெளிநடப்பு செய்தனர். அவைக்கு வெளியே வந்த நிலையில், அதிமுகவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஆர்.பி. உதயகுமார், பாலியல் குற்றம் நடைபெற்றால், அதன் முதல் தகவல் அறிக்கையை(FIR) வெளியிடக் கூடாது என விதி இருக்கும்போது, அது வெளியானதால், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசு நிறுவனத்தால் தகவல் வெளியானதாகக் கூறி, முதலமைச்சர் பொறுப்பை தட்டிக்கழிப்பதாகவும் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டினார்.


அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், சென்னை காவல் ஆணையரின் பேட்டிக்கும், உயர்கல்வித்துறை அமைச்சரின் பேட்டிக்கும் முரண்பாடு உள்ளதாக கூறிய அவர், இதுபோன் தொடர் சம்பவங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், தன்னை மிரட்டியவர்கள், அந்த சாரோடு நீ இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 3 ஆப்ஷன்களை கூறியதாக தெரிவித்திருப்பதாகவும், இந்நிலையில், காவல் ஆணையர், குற்றவாளி ஒருவர்தான் என எப்படி முடிவுக்கு வந்தார் என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், இந்த விவகாரத்தை காவல்துறை கையாள்வதில் பெரும் சந்தேகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பொள்ளாச்சி சம்பவத்தை சுட்டிக்காட்டி, தற்போது நடந்த தவறை ஞாயப்படுத்துவதா என்றும் முதலமைச்சரை விளாசிய ஆர்.பி. உதயகுமார், அந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற பரிந்துரைத்து, உரிய நடவடிக்கை எடுத்ததும் எடப்பாடி பழனிசாமிதான் என விளக்கமளித்தார். எனவே, அண்ணா பல்கலைக்கழ வழக்கில், முதலமைச்சர் பொய் தகவல்களை கூறுவதாகவும் அவர் விளாசினார்.