கரூரில் நேற்று இரவு கன மழை பெய்தது. விடிய விடிய கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் கனமழையின் காரணமாக புத்தகத் திருவிழா அரங்கை சுற்றி குளம் போல் மழைநீர் தேங்கி நிற்கின்றது.
கடந்த 19 ஆம் தேதி துவங்கிய கரூர் புத்தகத் திருவிழா 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் கனமழையின் காரணமாக புத்தகத் திருவிழா அரங்கத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்கின்றது. பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துமிடம், நுழைவு வாயில் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் குளம் போல தேங்கி நிற்கின்றது. மேலும் புத்தக அரங்கிற்குள் மழை நீர் உட்பகுந்ததால் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக புத்தகத் திருவிழாவிற்கு பொதுமக்கள் வருகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மூலமாக புத்தக அரங்கிற்குள் தேங்கிய மழை நீர் வெளியேற்றப்பட்டு, ஜேசிபி எந்திரம் கொண்டு மண்ணை கொட்டி சமன்படுத்தி வருகின்றனர். இதனால் புத்தகத் திருவிழாவை காண வரும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கரூர் திருமாநிலையூர் பகுதியில் புத்தகத் திருவிழா அமைந்துள்ளது. இப்பகுதியில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும், ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகளில் கூறியுள்ள படி திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். நேற்று பெய்த கனமழையால் புத்தகத் திருவிழா அரங்கை சுற்றி முழுவதுமாக தண்ணீர் தேங்கி நின்றது.
கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 652.20 மில்லி மீட்டர் ஆகும். இந்த மழையை ஜனவரி, பிப்ரவரி மாத குளிர்காலத்தில் 16.8 மில்லி மீட்டரும், மார்ச், ஏப்ரல், மே மாதம் ஆகிய கோடைகாலத்தில் 150.5 மில்லி மீட்டரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெய்யும் தென்மேற்கு பருவமழை காலத்தில் 238.4 மில்லி மீட்டரும், வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் 287.5 மில்லி மீட்டரும் என இந்த நான்கு சீசன்களிலும் சராசரியாக ஆண்டின் சராசரி மலை 652.20 மில்லி மீட்டர் கரூர் மாவட்டம் பெற்று வருகிறது.
ஒரு நாளில் பெய்த மழைக்கு இவ்வாறு தண்ணீர் தேங்கி நிற்கும் பொழுது, புதிய பேருந்து நிலையம் அமைந்தால் இனிவரும் மழைக்காலங்களில் என்ன செய்வது என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றன. இதற்கான முன்னேற்பாடுகளையும், தகுந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்களா என்று திருமாநிலையூர் பொதுமக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் வரும் மாதங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருந்தால் புதிய பேருந்து நிலையம் அமைவதற்கு ஏற்ற இடமாக இருக்காது. மேலும், இதனை சரிசெய்தால் மட்டுமே பேருந்து நிலையம் அமைவதற்கு ஏற்ற இடமாக இருக்கும் என்பது பொதுமக்களின் கருத்து.