கரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு சராசரி மழை பெய்யுமா? என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 652.20 மில்லி மீட்டர் ஆகும். இந்த மலையை ஜனவரி, பிப்ரவரி மாத குளிர்காலத்தில் 16.8 மில்லி மீட்டரும், மார்ச், ஏப்ரல், மே மாதம் ஆகிய கோடைகாலத்தில் 109.5 மில்லி மீட்டரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெய்யும் தென்மேற்கு பருவமழை காலத்தில் 238.4 மில்லி மீட்டரும், வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் 287.5 மில்லி மீட்டரும் என இந்த நான்கு சீசன்களிலும் சராசரியாக ஆண்டின் சராசரி மழை 652.20 மில்லி மீட்டர் கரூர் மாவட்டம் பெற்று வருகிறது. இதில் அதிகபட்சமாக ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையில் பெய்யும் மழைதான் ஆண்டின் சராசரி மழை அளவை எட்ட உதவியதாக இருந்து வருகிறது.
கடந்த 11 ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தில் 2011-ம் ஆண்டில் 723.6 மில்லி மீட்டரும், 2012-ம் ஆண்டில் 527.9 மில்லி மீட்டரும், 2013-ம் ஆண்டில் 489.1 மில்லி மீட்டரும், 2014-ம் ஆண்டில் 567.52 மில்லி மீட்டரும், 2015-ம் ஆண்டில் 820.52 மில்லி மீட்டரும், 2016ம் ஆண்டின் 350.52 மில்லி மீட்டரும், 2017-ம் ஆண்டில் 740.58 மில்லி மீட்டரும், 2018-ம் ஆண்டில் 486.67 மில்லி மீட்டரும், 2019-ம் ஆண்டில் 597.91 மில்லி மீட்டரும், 2020-ம் ஆண்டில் 751.03 மில்லி மீட்டரும், 2021ம் ஆண்டில் 934.56 மில்லி மீட்டரும், மழை பதிவாகியுள்ளது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் 2011, 2015, 2017, 2020, 2021-ம் ஆண்டுகளில் சராசரி மழையை விட அதிக அளவு மழை பெய்துள்ளது. 2012, 2013, 2014, 2016, 2018, 2019-ம் ஆண்டுகளில் சராசரியை விட குறைவாக மழை பெய்துள்ளது.
மழை சரியாக பெய்யாததால் இந்த ஆண்டுகளில் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆண்டின் சராசரி மழை பெய்யும் போது தான் விவசாய தேவைகளும் குடிநீர் தேவைகளும், மக்களுக்கும் பூர்த்தியாகும். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2020, 2021-ம் ஆண்டுகளில் சராசரி மழை அளவைவிட அதிக அளவிலான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கரூர் மாவட்டத்தில் 2022-ம் ஆண்டில் இது நாள் வரை ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 13.08 மில்லிமீட்டரும், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் 125.08 மில்லி மீட்டரும், தென்மேற்கு பருவமழை காலமான ஆகஸ்ட் மாதம் வரை 153.15 மில்லி மீட்டர் என இந்த ஆண்டு 291.31 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் மழையை பொறுத்துதான், ஆண்டின் சராசரி மழை அளவினை எட்டுமா? என கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர். ஆண்டின் சராசரி மழை அளவைப் பெற இனி வரும் காலங்களில் 360.31 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டியுள்ளது. இருந்த போதிலும் கடந்த 2 ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் கரூர் மாவட்டத்தில் சராசரி மழை அளவை தாண்டி அதிக அளவிலான மழை பெய்ய வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.