லட்சக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களை வாங்கிச் செல்ல கடல் அலையாய் படையெடுத்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அடுத்த தலைமுறை சமுதாயம் அறிவார்ந்த சமூகமாக உருவெடுக்க புத்தகத் திருவிழா பேரு உதவியாக அமையும். வரலாற்றுக் காலம் முதல் வாழும் காலம் வரை மனித வாழ்வை மேம்படுத்த உதவி வருவது புத்தகம் என்றால் அது மிகை ஆகாது. புத்தகம் ஒவ்வொரு தனிமனித வாழ்விலும் கட்டாயம் இடம்பெறும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்று வருகிறது. கல்வி சாலையில் பயின்ற புத்தகம் என்றாலும் கால வெள்ளோட்டத்தில் கற்றுக்கொள்ள உதவும் பல்வேறு தலைப்புகளான புத்தகங்கள் என்றாலும், கடந்த கால வரலாற்றை நம் கண் முன்னே காட்சியாக நிலை பெறச் செய்யும் புத்தகமாக இருந்தாலும், மனித வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் அவனது தேவையும் அவசியம் அறிந்து புத்தகங்கள் வழிகாட்டியாக அமையும் என்பதை மறுப்பதற்கு இல்லை.




அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் கொரோனோ காலத்திற்கு முன்பாக தனியார் அமைப்பினர் சிறிய அளவிலான புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வந்தனர். தற்போது முதன் முதலாக கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் கரூர் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள திருமாநிலையூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் புத்தக கண்காட்சி  ஆகஸ்ட் 19ம் தேதி மாலை 6:00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் தமிழக மின்சாரம் மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இந்த புத்தக கண்காட்சியை வருவாய்த்துறை, காவல்துறை,கரூர் மாநகராட்சி, மாவட்ட மைய நூலகம், ஊரக வளர்ச்சி துறை, தீயணைப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை, தொல்லியல் துறை, கல்லூரி கல்வி இயக்க துறை, போக்குவரத்து துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.




இந்த கண்காட்சியில் 115 புத்தக அரங்குகள், தொல்லியல் அருங்காட்சியகம், குறும்பட திரையரங்கம், கோளரங்கம், நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் உணவகம் என பல்வேறு சிறப்பு அம்சங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பொன்னியின் செல்வன்,சிலப்பதிகாரம், கலிங்கத்துபரணி காந்தி படுகொலை, இந்திய அரசியலமைப்பு, சட்டம், கம்பன் புதிய பார்வை, சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாற்று புத்தகங்கள் விவசாயம் உணவு சார்ந்த புத்தகங்கள் இன்றைய மாணவ, மாணவிகள் பயன்படுத்தி எளிதாக கூடிய தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் சாப்ட்வேர் மற்றும்  இங்கு வாங்கும் புத்தகங்களுக்கு 10% தள்ளுபடி அளிக்கப்படுகிறது. தமிழகத்திலேயே கரூர் மாவட்டத்தின் கடவூர் தாலுக்கா பகுதியில் உள்ள காடுகளில் அதிக அளவில் தேவாங்கு விலங்கினம் வசித்து வருகிறது. இந்த இனத்தை பாதுகாப்பதற்கு கடவூரில் "தேவாங்கு சரணாலயம்" அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாலின சமத்துவத்தை உணர்த்தும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் சம உரிமைகளை அடையாளப்படுத்தும் வகையிலும் "நூலன் - நூலி" என்ற லோகோ வடிவமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.




இந்த புத்தக கண்காட்சி குறித்து பொதுமக்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். கரூரில் தனியார் அமைப்பினர் நடத்தியதை விட அரசின் சார்பில் இப்போது வெகு சிறப்பாக இந்த புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த புத்தகக் கண்காட்சியில் புத்தக வெளியீட்டாளர்கள், பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் பங்களிப்போடு வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் காரணமாக அரசே பள்ளிகளை ஆன்லைனில் தான் நடத்தி வந்தது. இதனால் ஆன்லைன் தேவையும் அவசியமாக இருந்தது. ஆயினும் ஆன்லைன் வாயிலாக கல்வி கற்பதற்கும் புத்தகத்தை கையில் எடுத்து பயில்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. புத்தகத்தில் படிக்கும் கருத்துக்கள் ஆழ்மனதில் நிலை கொள்ளும். எனவே புத்தகம் வாயிலாக பயில்வது தான் சிறந்த நிலையாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.




மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவிக்கும்போது, கரூர் மட்டுமல்லாது தமிழக முழுவதும் இது போன்ற புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட உள்ளது. இந்த புத்தகத் திருவிழா அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருக்கும் குறிப்பாக அடுத்த தலைமுறை அறிவார்ந்த சமூகமாக உருவாவதற்கு இது போன்ற புத்தகக் கண்காட்சி திருவிழா முக்கிய பங்கு வைக்கும் என்றார். மனிதன் உயிர் வாழ சுவாசிப்பது எவ்வளவு அவசியமோ! அதுபோல மனித வாழ்வு மேம்பட புத்தகங்களை வாசிப்பதும் அவசியமே.