குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்க வேண்டும் என உலக தாய்ப்பால் வாரவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபு சங்கர் கூறினார்.


கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் வீரராக்கியம் கிராமத்தில் நேற்று உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது. இது குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தாய்ப்பால் கொடுக்க வேண்டியது நமது கடமை அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவசியமே இல்லை. இருந்த போதும் நவ நாகரிக உலகில் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.





குழந்தைகளை பாதுகாப்பதில் இரண்டு வகை பிரச்னைகள் உள்ளது. ஒன்று பழமைவாதம் மற்றொன்று புதுமை வாதம், பழமை வாதத்தை பொருத்தவரை குழந்தை பிறந்தவுடன் சர்க்கரை தண்ணீர் வாயில் ஊற்றுவது, பெயர் வைக்கும் போது மோதிரத்தை தேனில் மூழ்கி வாயில் வைப்பது இதெல்லாம் மிகவும் தவறான செயல். அதேபோல் புதுமை வாதத்தை பொருத்தவரை ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு அதாவது 181வது நாட்களுக்கு பின் இணை உணவு கொடுக்க வேண்டும். இணை உணவு எக்காரணத்தைக் கொண்டும் ஏதாவது ஒரு ஆலையில் தயார் செய்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை கொடுக்கக் கூடாது. இயற்கையாக பாரம்பரியமிக்க நமது வீட்டில் சமைக்கப்படும் உணவுகளை மட்டுமே எளிமையான உணவுகளை குழந்தைக்கு கொடுக்க வேண்டும். அதுவும் குறிப்பாக குழந்தை பிறந்தவுடன் சீம்பால் அவசியம் கொடுக்க வேண்டும் அதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.




தாய்ப்பால் கொடுப்பதிலோ அல்லது தாய்ப்பால் சுரப்பதிலோ ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் மட்டுமே ஆலோசனை கேட்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதன் காரணமாக குழந்தைகளுக்கு ஏகப்பட்ட நன்மையும் அதேபோல் தாய்மார்களுக்கும் ஏகப்பட்ட நன்மைகளும் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. முதியோர்கள் தயவு கூர்ந்து இந்த கருத்துக்களை உங்கள் வீட்டில் உள்ள இளம் தாய்மார்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதில் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்கிட முடியும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபு சங்கர், முன்னதாக கர்ப்பினி தாய்மார்களுக்கு பச்சிளம் குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறை மற்றும் விளையாட்டு மூலம் கற்றல் புத்தகங்களை  வழங்கினார். மேலும் தாய்ப்பால் அவசியம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்ட பின்னர் அது குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.




தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் குழந்தைகளின் வயசு அதற்கேற்ற உயரம் மற்றும் எடை உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொண்டு எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை வழங்க ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் நாகலட்சுமி, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பாதேவி, ஒன்றிய கவுன்சிலர் லீலாவதி, ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி, கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் முருகன், கர்ப்பிணி தாய்மார்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசுஅலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண