அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு, 883 கன அடியாக குறைந்தது. ஆனால், நீர்மட்டம் 88 அடியை தாண்டிய நிலையில் உள்ளதால், விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கடந்த ஜூலை மாதம், இரண்டாவது வாரத்தில் கேரளா மாநிலம் உள்ளிட்ட நீ பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்தது. இதனால், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணைக்கு வினாடிக்கு, 5,000 கன அடி வரை தண்ணீர் வந்தது. இதனால், அணை நீர்மட்டம், 80 அடியை தாண்டியது. இதனால் கடந்த மாதம், 6 முதல், 20 வரை, 15 நாட்களுக்கு, அமராவதி அணையிலிருந்து ஆற்றில் அதிகபடியான தண்ணீர் திறக்கப்பட்டது.




இந்நிலையில், தென்மேற்கு பருவமழை குறைந்ததால், அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்தது. காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 833 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஷட்டர்கள் மூலம், 15 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 88.13 அடியாக இருந்தது. கரூர் மாவட்டத்தில், அமராவதி பாசன பகுதியில் விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளை துவங்கியுள்ளனர். இதனால், ஆற்றில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அணைக்கு தண்ணீர் குறைந்துள்ள நிலையில் நீர்மட்டம், 88 அடியை தாண்டி உள்ளதால், கரூர் மாவட்ட விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளன.




கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 9,459 கன அடி தண்ணீர் வந்தது. காலை, 8:00 மணி நிலவரம் படி வினாடிக்கு, 11 ஆயிரத்து, 405 கன அடியாக தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில் 10 ஆயிரத்து, 185 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.




திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 33.59 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.




கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 26.37 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.