கரூரில் பாசன வாய்க்காலில் சாயக் கழிவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் 2000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்படைந்ததால் இழப்பீடு வழங்க விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளனர்.


 


 




கரூர் அமராவதி ஆற்றில் இருந்து செல்லாண்டிபாளைத்தில் தொடங்கும் இந்த வாய்க்கால் ஆண்டாங்கோவில், சனப்பிரெட்டி வழியாக வரும் கட்டளை வாய்க்காலில் புலியூர் கோவில்பாளையம், ஓடமுடையார்பாளையம், மேலகட்டளை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் பாசனத்திற்கு செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் இப்பகுதியில் சுமார் 2000 ஏக்கர் நிலத்தில் நெல், பருத்தி, தென்னை உள்ளிட்ட பயிர்கள் விவசாய சாகுபடி செய்யப்பட்டு வருகின்றார்கள்.


 




 


தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வரும் நிலையில், மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், வாய்க்காலில் சாயக்கழிவு தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நெற்பயிர் கருகி வரும் நிலையில், சாயக்கழிவு நீர் விலை நிலங்களில் புகுந்துள்ளதால் விவசாயம் பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நெற்பயிர் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறி வருகின்றனர். பாசன நீருடன் சாயக்கழிவு நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


 




உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து சாயக் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். நெல் முளைக்கும் தருவாயில் சாயக்கழிவு நீர் கலந்து வருவதால் விவசாயம் முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இதே நிலைதான் நீடித்து வருகிறது. எனவே விளைநிலங்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.