Tiruvannamalai Karthigai Deepam 2025: "திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் முக்கிய விழாவான, பரணி தீபம் இன்று காலை 4 மணியளவில் ஏற்றப்பட்டது"
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் ஜோதி வடிவத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பதாக நம்பப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம், தீபத் திருவிழாவின் போது திருவண்ணாமலை அண்ணாமலையார் மலைமீது ஏற்றப்படும் தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் படை எடுப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் 10 நாட்கள் திருவிழாவில், பத்தாம் நாள் அதிகாலை ஏற்றப்படும் பரணி தீபம் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பரணி தீபம்
கார்த்திகை தீபத் திருவிழாவின் 10 வது நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி(தீபம் ஏற்றி), தீபாராதனை காட்டி, அதன் மூலம் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால், நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும், ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக, பைரவர் சன்னதியில் வைப்பது வழக்கமாக உள்ளது.
"ஏகன் அனேகன்"
இந்த வகையில் இன்று அதிகாலை 4 மணியளவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதிகாலை 03.30 மணி அளவில் சாமி மூலவர் சன்னதி முன், “ஏகன் அனேகன்” என்பதை குறிக்கும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
பெரிய தீபம் மூலம் 5 தீபங்கள் ஏற்றப்பட்டன. இந்த ஐந்து தீபங்களும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய பஞ்ச பூதங்கள், சிவபெருமான் ஒருவனே அதாவது ஏகன், அனேகன் என்பதை கூறும் வகையில், தீபம் ஏற்றப்படுவதாக நம்பப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அடிவாரத்திலும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மலை மீதும் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.