தென்மேற்கு பருவமழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், காவிரி நீர் வெளியேற்ற அளவானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா காவிரி:
தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன . இந்த தருணத்தில், கர்நாடக அணைகளில் இருந்து, நீர் வெளியேற்ற அளவானது அதிகரிக்கப்பட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து 70, 000 கன அடி நீரும், கே.ஆர். எஸ் அணையிலிருந்து 748 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், மொத்தமாக காவிரி நீர் வெளியேற்ற அளவானது, 75, 000 கன அடியை தாண்டியுள்ளது. இதனால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வெள்ளப்பெருக்கு காரணமாக, 3வது நாளாக ஒகேனக்கலில் பரிசல் இருக்க தடை செய்யப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 5,054 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 20,910 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 23,989 கன அடியாக அதிகரித்துள்ளது. இது, மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது.
அதிகரிக்கும் நீர்வரத்து:
மேலும் ஜூலை 21 வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு, மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.