கர்நாடகாவால் மேகதாது அணை கட்டமுடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்ட வேண்டும் என்றால் தமிழ்நாட்டின் அனுமதி வேண்டும், அனுமதி பெறாமல் கட்ட முடியாது என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீர் பாதிக்கப்படும் எனக் கூறி தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை பொருட்படுத்தாத கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டியே தீருவோம் என தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வர, தமிழக அரசும் அதை எதிர்த்து  சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.


இப்படிப்பட்ட சூழலில்தான், கர்நாடகாவில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தது. பாஜகவை தொடர்ந்து கர்நாடகாவில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் அரசும், மேகதாது விவகாரத்தில் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணையை கட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக கர்நாடக அரசு பட்ஜெட் தாக்கலின்போது அறிவிப்பு வெளியிட்டிருப்பது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் மேகதாது மட்டும் இன்றி கலசா - பந்தூரி, மேல் கிருஷ்ணா, மேல் பத்ரா மற்றும் எட்டிஹனோல் உள்பட பல்வேறு பாசன, குடிநீர் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, "காவிரி ஆற்றின் குறுக்கே லட்சிய திட்டமான மேகதாது அணை மற்றும் குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்த தனித் திட்டப் பிரிவு மற்றும் இரண்டு துணைப் பிரிவுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக அரசுக்கு கடும் எதிர்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.


கர்நாடகாவால் மேகதாது அணை கட்டமுடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளதாவது.





மேகதாது அணை கட்ட வேண்டும் என்றால் தமிழ்நாட்டின் அனுமதி வேண்டும், அனுமதி பெறாமல் கட்ட முடியாது என்றும் எத்தனை குழு அமைத்தாலும் அணை கட்ட முடியாது என என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.