காரைக்காலில் படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில் சிகிச்சை அளித்ததில் மருத்துவர்களின் அலட்சியம் கண்டித்து காரைக்கால் மாவட்டம் முழுவதும் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

காரைக்கால் அடுத்த நேரு நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலமணிகண்டன், சக மாணவியுடன் படிப்பு போட்டி காரணமாக கடந்த 2ம் தேதி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டான்.

 

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது, போலீசாரும், மருத்துவர் அலட்சியம் காட்டியதால் தான் மாணவன் உயிரிழந்தான் என்று குற்றம் சாட்டினர்‌. எனவே காவல்துறை மற்றும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

 

சிறுவன பாலமணிகண்டன் சிகிச்சை விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் போராளிகள் குழுவினர் வாட்ஸ் அப் மூலம் காரைக்காலில் முழு கடை அடைப்பு போராட்டம் அறிவித்திருந்தனர். 

 

இதற்கு ஆதரவு தெரிவித்து காரைக்கால் மாவட்டம் முழுவதும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால், கோட்டுச்சேரி, திருநள்ளாறு, திருமலைராயன்பட்டினம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மருந்தகம், பால் விற்பனையகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர்த்து மற்ற கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் அலட்சியமாக பணியில் ஈடுபட்ட மருத்துவர் மற்றும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் காரைக்கால் மருத்துவமனையில் ஊதியம் பெற்றுக் கொண்டு புதுச்சேரியில் பணிபுரியும் ஊழியர்களை மீண்டும் காரைக்கால் மருத்துவமனையில் பணிபுரிய புதுச்சேரி முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், காரைக்கால் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.