காரைக்காலில் மீனவர்கள் வலையில் சிக்கிய யானை தந்தத்தை மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.

 

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த தாமரைச்செல்வன் என்பவரது மீன்பிடி விசைப்படகில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த வாரம் மீன் பிடிக்க சென்றுள்ளனர். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடந்த 31ம் தேதி வலையில் எதிர்பாராத விதமாக விலைமதிப்பற்ற யானைத் தந்தம் ஒன்று சிக்கி உள்ளது. இதனை அடுத்து நடுக்கடலிருந்து இருந்து கிளிஞ்சல் மேடு மீனவ பஞ்சாயத்தார்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு அம்மீனவர்கள் கரை திரும்பினர்.



 

இந்த நிலையில், இன்று கிளிஞ்சல் மேடு மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில் அந்த யானை தந்தத்தை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டனிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர். மாவட்ட ஆட்சியர் அவர்களை பாராட்டியதோடு யானை தந்தத்தை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். கடலிலிருந்து கிடைத்ததால் தந்தம் சற்று சேதமடைந்து இருந்தது. மீனவர்களின் வலையில் கடலுக்கு சற்றும் சம்பந்தமில்லாத யானை தந்தம் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.