கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் குமார் சங்கர் எலெக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார். ரீத்தாபுரம் பேரூர் திமுக செயலாளரான இவர், கடந்த திங்கள் அன்று இரவில் வீட்டருகே மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக குளசசல் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கொலை நடந்த அன்று தனது தந்தையை காப்பாற்ற யாரும் வரவில்லை என கத்தி அழுது கூச்சலிட்ட மூத்த மகள் தீபாவதி தந்தை இறந்ததைக் கண்டு ஓவர் ஆக்டிங் செய்து மாட்டிக் கொண்டுள்ளார். அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது செல்போனை ஆய்வு செய்தனர் அதில் கோபு என்ற வாலிபருக்கு அடிக்கடி போன் செய்தது தெரியவந்தது இதனை அடுத்து கோபுவை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் தீபாவதி தான் தனது தந்தையை கொலை செய்ய வேண்டும் எனக் கேட்டு அதற்காக திட்டம் தீட்டி கொடுத்ததாக போலீஸிடம் ஒப்புக்கொண்டார். உடனடியாக தீபாவதி வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், தனது தந்தை குடிபோதையில் அடிக்கடி வீட்டில் வந்து தங்களை துன்புறுத்தி வந்ததால் இதற்கு முடிவு கட்ட எம்.எட் பட்டதாரியான தீபாவதி எண்ணினார். அதற்காக திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த நண்பரான கோபு (18) என்ற இளைஞனிடம் தந்தையை கொலை செய்யும் திட்டம் குறித்து கூறியுள்ளார்.
அதை தொடர்ந்து கோபு தனக்குத் தெரிந்த நண்பரான ஸ்ரீ முகுந்தன் என்ற வாலிபரை தொடர்பு கொண்டு விபரத்தைக் கூறி, தீபாவதிக்கு அறிமுகம் செய்து வைத்து மூவரும் கொலைகான திட்டத்தை தீடியுள்ளனர். அதனடிப்படையில் கொலைக்கான கூலியாக ஒரு லட்ச ரூபாய் கேட்ட ஸ்ரீ முகுந்தன் பேரம் பேசி 60 ஆயிரம் ரூபாய்க்கு கொலை செய்யலாம் என ஒப்புக் கொண்டதோடு 10,000 ரூபாய் முன்பணமாக பெற்றுக் கொண்டார். அந்தத் திட்டத்தின் அடிப்படையில் தீபாவதி அளித்த தகவலின்படி, குமார் சங்கரை அவரது வீட்டிற்கே சென்று ஸ்ரீ முகுந்தன் வெட்டி படுகொலை செய்துள்ளார். இவ்வழக்கில் தீபாவதி, கோபு, ஸ்ரீ முகுந்தன், ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மனைவியையும் பிள்ளைகளையும் குடிபோதையில் வந்து தொடர்ந்து துன்புறுத்தியதால் தந்தையான திமுக பிரமுகரை மகளே திட்டம்போட்டு கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.