பிரதமர் மோடி நிகழ்ச்சியில், கன்னியாகுமரி பா.ஜ.க. வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அனுமதி மறுப்பு காரணமாக அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து வெளியேறினார் என்று தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை உயர் அதிகாரியிடம் அனுமதி கேட்டு சிறிது நேரம் இருந்ததாகவும், பின்னர் அனுமதி கிடைக்காமல் , அங்கிருந்து கிளம்பி சென்றதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. ‘
பிரதமர் வருகை:
பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள பாறையில் இன்று மாலை முதல் நாளை மறுநாள் வரை தியானம் செய்ய திட்டமிட்டுள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக கன்னியாகுமரிக்கு இன்று வருகை தந்தார். பிரதமர் மோடி தனிப்பட்ட நிகழ்ச்சிக்கு வருகை தருவதால், கட்சி நிர்வாகிகள் யாரும் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என பாஜக கட்சி தலைமையகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
அனுமதி மறுப்பு:
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன். பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் வந்து இறங்கக்கூடிய , அரசு மாளிகைக்குள் செல்ல அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. காவல்துறை உயர் அதிகாரியின் அனுமதி இருந்தால்தான், அரசு மாளிகைக்குள் செல்ல அனுமதி என பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காவல்துறை உயர் அதிகாரியிடன் அனுமதி கேட்டதாகவும், அனுமதி கிடைக்கவில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றன
இது குறித்து செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது, காவல்துறை பாதுகாப்பு குறித்து அறிந்து கொள்ளவே வந்தேன் என்று மட்டும் தெரிவித்து , அவ்விடத்தை விட்டு புறப்பட்டுச் சென்றார்.
பிரதமர் தியானம்:
பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தை பஞ்சாப்பில் முடித்துவிட்டு, இன்று கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். அங்குள்ள விவேகானந்தர் பாறையில், இன்று மாலை முதல் ஜூன் 1ஆம் தேதி காலை வரை தியானம் நடத்த திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.