கண்ணகி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள சுவர்களில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

  


சென்னை புறநகர்ப் பகுதியில் கிழக்கு கடற்கரைச் சாலையில் வானுயர வளர்ந்து நிற்கும் அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்டது கண்ணகி நகர். இந்த பகுதி இந்தியாவின் மிகப்பெரிய மீள்குடியேற்றப் பகுதியாகும். நுழைவு பகுதியில் போக்குவரத்து கழக பணிமனை, அருகிலேயே மருத்துவமனை, பெரிய பூங்கா என சகல வசதிகளுடன் கூடிய இந்த குடியிருப்பு உள்ளது. 


கிட்டதட்ட ஒன்றரை லட்சம் மக்கள் வாழும் கண்ணகி நகரின் பெயரைக் கேட்டாலே பலருக்கும் மோசமான சம்பவங்கள் குறித்த நினைவுகள் தான் வந்து செல்லும். சினிமாவிலும் அப்படித்தான் காட்டப்படுகிறது. ஆனால் அப்பகுதி மக்கள் கல்வி,விளையாட்டு என அனைத்து துறைகளிலும் சிறந்தவர்களாக திகழ்ந்து தங்கள் மீதான பிம்பத்தை பொய்யாகி வருகின்றனர். இப்போது ஆபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.


அங்கு தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.25 கோடி செலவில் சமூகநலக்கூடம்  கட்டுவதற்கான பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றுள்ளனர். தற்போது அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்படுகிறது. அந்த பள்ளம் அருகிலுள்ள குடியிருப்பின் பேஸ்மெண்ட் தெரியும் அளவுக்கு உள்ளதால், கட்டடம் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அங்கு வாழும் மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். அதேசமயம் சுவர்களில் விரிசலும் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது, 


சமூக நலக்கூடம் கட்டப்படும் பகுதியில் 36 குடியிருப்புகள் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள நிலையில், அரசுக்கு இதுகுறித்து பலமுறை தகவல் தெரிவித்தும், வேண்டுகோள் விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் காரில் வந்த சிலர், இப்பகுதியில் வாழும் மக்களிடம் இரவில் வேறு எங்கேயாவது சென்று தங்கி கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். 


அதேசமயம் பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில், குழந்தைகள் விளையாடி வருவதால் எவ்வித பாதுகாப்பும் இன்றி உள்ளதாக மக்கள் கூறியுள்ளனர். இதனிடையே குடியிருப்பு பகுதிகளை தாங்கி பிடிக்கும் தூண்கள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கட்டிடப்பணி மேற்கொள்ளப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.