சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள் என சீமானுக்கு திமுக எம்.பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “பகுத்தறிவு - சமத்துவம் - பெண் விடுதலை - அறிவியல் வளர்ச்சி - தமிழ்நாட்டின் முன்னேற்றம் எனும் முற்போக்கு சிந்தனைகளை முன்வைக்கும் அனைவருக்கும் தந்தை பெரியாரே தலைவர். அதற்கெதிரான கருத்தியல் கொண்டவர்கள் அவரை எதிர்த்து எதிர்த்து ஓய்ந்து போகட்டும். சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசியிருக்கும் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் குறித்த கருத்துக்கு ஆதாரம் தரும் வரை சீமான் எங்கு சென்றாலும் விட மாட்டோம் என தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் நடந்த கட்சி கூட்டத்தை தொடர்ந்து சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெரியார் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து பெரியார் பேசாததை பேசியதாக திரித்து பொய் கூறும் சீமானை கைது செய்ய வேண்டும் என திராவிட கட்சிகள் கண்டனங்களை குவித்து வருகின்றன.
சமூக வலைதளங்கள் எங்கும் சீமான், பெரியார் குறித்த பேச்சுக்கள் தான் அடிபடுகின்றன. இந்நிலையில் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், ”பெரியாரை எதிர்ப்பதுதான் என் கொள்கை. தமிழர்களுக்கு பெரியார் தான் அரண் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்? தமிழை, தமிழர்களை இழிவுபடுத்தியவர் பெரியார். திராவிடம் குறித்த தெளிவு இல்லாமல் பெரியாரை ஆதரித்து பேசி வந்தேன். தற்போது தெளிவாகிவிட்டேன். படிக்க படிக்கத்தான் திராவிடம் என்று கூறுபவர்கள் திருடர்கள் என்று தெரிந்து கொண்டேன். திராவிடம் பேசுபவர்களை ஒழிப்பது, பெரியார் கொள்கைகளை எதிர்ப்பது தான் என் கொள்கை. தமிழ் பேரினத்திற்கு எதிராக சிந்தித்தவர், பேசியவர் பெரியார். பெரியார்தான் எல்லாம் செய்தார் என்றால் எங்கள் முன்னோர் செய்தது என்ன? இனி எங்களுக்கு பெரியார் வேண்டாம். இனி திராவிடத்தை ஒழிப்பதுதான் என் வேலை. திராவிடம் என்ற சொல் ஒழியும்.
தமிழ் மொழியை சனியன் என விமர்சித்தவர் பெரியார். தமிழ், தமிழர் அரசு என்று பேசுவது பித்தலாட்டம் என கூறியது பெரியார்” என கடுமையாக சாடினார்.
இதைத்தொடர்ந்து பல்வேறு கட்சிகள் மற்றும் வழக்கறிஞர்களிடம் இருந்து வந்த புகாரையடுத்து நெல்லை, மயிலாடுதுறையில் சீமானுக்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளது.