தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதாக திமுக ஒருபோதும் சொல்லவில்லை என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது. அப்போது பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒதுக்குவதற்கான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயாராகவே உள்ளது. பி.எம்ஸ்ரீ திட்டத்தில் திமுக அரசு U TURN அடித்துள்ளது.
மாணவர்களின் கல்வியை வைத்து திமுக அரசியல் செய்கிறது. பிஎம்.ஸ்ரீ திட்டத்தை எதிர்க்கும் தமிழ்நாட்டின் சூப்பர் முதலமைச்சர் யார்? பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திமுக அரசு கையெழுத்திட தயாராக இருந்தது. சூப்பர் முதல்வரின் பேச்சை கேட்டு கடைசி நேரத்தில் கையெழுத்திட மறுத்தனர்.
தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை தமிழக அரசு பாழாக்குகிறது. திமுக எம்.பிக்கள் அநாகரீகமானவர்கள்” எனத் தெரிவித்தார்.
மேலும், “பிம்.ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்றது கனிமொழிக்கும் தெரியும். எனது சகோதரி கனிமொழி என்ன நடந்தது என்பதை திமுக எம்.பிக்களுக்கு புரிய வைக்க வேண்டும். யார் அந்த சூப்பர் முதல்வர் என்பது குறித்து திமுக எம்.பி கனிமொழி விளக்கம் சொல்ல வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து திமுக எம்.பிக்கள் முழக்கமிடவே மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் தொடங்கியதும் கனிமொழிக்கு பேச வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “திமுக எம்.பிக்களை அநாகரீகமானவர்கள் என மத்திய அமைச்சர் பேசியது வருத்தம் அளிக்கிறது. இதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பி.எம்.ஸ்ரீ திட்டத்தை முழுமையாக ஏற்க முடியாது என கூறினோம். தேசிய கல்வி கொள்கையை திமுக எம்.பிக்கள் ஒருபோதும் ஏற்பதாக தெரிவிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “திமுக எம்.பிக்கள் கத்தக்கூடாது. அநாகரீகமானவர்கள் என்ற வார்த்தை புண்படுத்தியிருந்தால் அதை திரும்ப பெற்று கொள்கிறேன். தேசிய கல்வி கொள்கையில் சில விஷயங்களை ஏற்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் கூறியிருந்தார்.” எனத் தெரிவித்தார்.