திராவிடத்திற்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சென்னை விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேட்டி அளித்துள்ளார்.
அண்ணாவை அவமானப்படுத்திய இடத்தில் என்ன வேலை?
சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக திமுக நாடாளுமன்ற குழு தலைவரும் எம்பியுமான கனிமொழி சென்னை விமான நிலையம் வந்தார். அப்பொழுது, அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, "அதிமுக தொடர்ந்து பாஜகவுடன் இணைந்து செயல்படுவது என்பது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடிய ஒன்று.
அதே நேரத்தில் ஒரு படி மேலே போய் பெரியாரையும் அண்ணாவையும் அவமானப்படுத்தக்கூடிய இடத்திலேயே அவர்களும் இணைந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது அவர்களை உண்மையிலேயே யார் என்பதை காட்டுகிறது.
கொந்தளித்த கனிமொழி:
திராவிட இயக்கத்திற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாக மக்கள் உணர்ந்து கொள்ளும் அளவிற்கு காட்டியுள்ளது" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக அடிமை ஆகிவிட்டார்கள். திமுக இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். மதத்தின் பெயரால் இங்கு அரசியல் செய்ய முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி திருச்சி செல்வதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "இந்து அமைப்புகள் நடத்திய முருகன் மாநாட்டில் அண்ணா, பெரியாருக்கு எதிராக பேசினார்கள். அதில், அதிமுகவை சேர்ந்த நான்கு பயில்வான்கள் சென்று கலந்து கொள்கிறார்கள்.
பாஜகவும் இந்து முன்னணியும் எங்களுக்கு முருகனை அறிமுக படுத்துகிறார்களா? நடையாக நடந்து சென்று இடுப்பில் துண்டை கட்டிக்கண்டு சூரசம்காரம் அனைத்தும் பார்த்த நாம் கோயிலுக்கு செல்ல முடியாததை எதிர்த்து போராடிய பெரியாரையும் அண்ணாவையும் மேடையில் இழிவு படுத்துகிறார்கள்.
இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 2026இல் தோல்வி அடைந்து விட்டால் முருகன் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை என ஒத்துக் கொள்வார்களா. அதிமுக அடிமை ஆகி விட்டார்கள். திமுக இன்னும் தீவிரமாக இறங்க வேண்டும்.
கொத்தடிமை வாழ்வை அதிமுக துவங்கி விட்டது. பெரியாரும் அண்ணாவும் கூறிய வழியில் ஜெயலலிதாவும் எம்ஜிஆரும் வழி நடத்தினார்கள். அவர்களை கேவலமாக பேசுவதை வேடிக்கை பார்ப்பது எந்த வகையில் நியாயம்.
பண்டாரங்கள் மாளிகையில் பகுத்தறிவுக்கு என்ன வேலை. நடிகர் விஜயும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இந்து முன்னணி கூட்டத்தில் இவர்களுக்கு என்ன வேலை அங்கு சென்ற பிறகுதான் அந்த வீடியோவை பார்த்தோம் என கூறினால் அதன் பின் இவர்களுக்கு அங்கு என்ன வேலை கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டியதுதானே. இதை தமிழக மக்கள் கொஞ்சம் கூட ஒப்புக்கொள்ள மாட்டார்கள். போலி திராவிடம் என பேசியதை போட்டுக்காட்டுகிறார்கள்" என்றார்.