திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

Continues below advertisement

சஷ்டி பெருவிழா

முருகனுக்கு உகந்த தினங்களில் மிக முக்கியமானது கந்த சஷ்டி பெருவிழா. ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசைக்குப் பின், வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி திதி வரையிலான இந்த 6 தினங்களும் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படும். முருகன் சூரனை அழித்ததை கொண்டாடும் வகையில் இந்த நாளான கொண்டாடப்படுகிறது.தமிழ்நாட்டில் முருகனுக்கு அறுபடை வீடு இருந்தாலும் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கொண்டாடப்படும் சஷ்டி விழா மிகவும் பிரசித்திப் பெற்றது. 

அதன்படி கடந்த நவம்பர் 13 ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தங்கதேரில் ஜெயந்தி நாதர் எழுந்தருளுதல், வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு, சண்முக விலாசம் சேர்தல் உள்ளிட்ட பல நிகழ்வுகள் அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்றது. 

Continues below advertisement

சூரசம்ஹாரம் 

இதனைத் தொடர்ந்து கந்த சஷ்டி திருவிழாவின் ஆறாம் நாளான இன்று (நவம்பர் 18) சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. மாலை 4 மணியளவில் கோயில் கடற்கரையில் நடைபெறும் நிகழ்வில் முருகப்பெருமான சூரபத்மனை வதம் செய்யும் சம்பவம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை காண தமிழ்நாடு முழுவதும்  மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏற்கனவே திருச்செந்தூருக்கு வருகை தந்து விரதம் இருந்து வருகின்றனர். இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 1.30 மணியளவில் விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.காலை 9 மணியளவில் உச்சிகால பூஜை, மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது. இதனையடுத்து மாலை 4 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று, இருவரும் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி கிரி வீதி வலம் வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து நாளை திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுகிறது. 

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 

திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் விதமாக டிசம்பர் 9 ஆம் தேதி பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்செந்தூரில் உள்ள மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை கூடுதலாக திருக்கோயில் நிர்வாகம் அமைத்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.