Kanchipuram Temple: "காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லக்கோட்டை முருகன் கோவிலில், மார்கழி மாதம் கல்யாண உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகரை தரிசித்தனர்"

Continues below advertisement

வல்லக்கோட்டை முருகர் கோயில் - Vallakkottai Murugan Temple 

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் 1000 ஆண்டுகள் பழமையான அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்று பிரசித்திபெற்று விளங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் கிருத்திகை, விசாகம், சஷ்டி, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் வந்து வழிபடுவோருக்கு சொந்த வீடுமனை, திருமணம், பதவி உயர்வு, வளமான வாழ்வு கிடைப்பதாக ஐதீகம் என நம்பப்படுகிறது. 

முருகப்பெருமாள் திருக்கல்யாண உற்சவம்

புராண காலத்தில் தேவர்களின் தலைவன் இந்திரன் வல்லக்கோட்டைக்கு வந்து முருகப் பெருமானைப் பூஜித்து இந்திராணியைத் திருமணம் செய்து கொண்டான். 7 வாரங்கள் வல்லக்கோட்டைக்கு வந்து பூஜிப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது இத்திருக்கோயில் முருகப்பெருமானின் சிறப்பாகும். பலர் விரதமிருந்து வல்லக்கோட்டைக்கு வந்து வணங்கி கல்யாண பாக்கியம் பெற்றுள்ளனர்.

Continues below advertisement

இது கல்யாண பிரார்த்தனை தலம் என்பதால் இங்கு ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமை உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு கல்யாண உற்சவம் நடைபெற்று வருகிறது பிரார்த்தனை தலமாகிய இங்கு மார்கழி மாதத்திற்கான கல்யாண உற்சவம் ஞாயிறன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. 

ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

இதனை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்குப் பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உட்பட பலவித பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு மணமக்கள் திருக்கோலத்தில் மயில் மண்டபத்திற்கு அவர் எழுந்தருளினார். கல்யாண உற்சவத்தில் பங்குபெற திரளான பக்தர்களும் கல்யாண வரம்வேண்டி வந்தவர்களும் மாலைகளுடன் அங்கு குழுமியிருந்தனர்.

காலை 9.30 மணிக்கு கல்யாண உற்சவம் தொடங்கியது. திருக்கோயில் தலைமை அர்ச்சகர் சந்திரசேகர குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள் மந்திரங்கள் ஓதிட மங்கலவாத்தியங்கள் ஒலித்திட 11.30 மணிக்கு மாங்கல்யதாரணம் நடைபெற்றது. உற்சவத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அரோகரா அரோகரா என்று கோஷமிட்டு உளமுருகி வேண்டினர்.

கல்யாண கோலத்தில் சுப்பிரமணிய சுவாமி மூன்று முறை திருக்கோயில் பிரகாரத்தில் வலம் வந்தார். இந்த உற்சவத்தில் திருமணமாகாத ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். அனைவருக்கும் திருமண அட்சதை பிரசாதம் வழங்கப்பட்டது. சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

மார்கழி மாத கல்யாண உற்சவ ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் சி.குமரதுரை அறிவுரையின்படி திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் த.விஜயகுமார், கலைச்செல்வி கோபால், கே.மோகனகிருஷ்ணன், பு.செல்வகுமரன் செய்திருந்தனர்.