ஸ்ரீபெரும்புதூரில் 108 ஆம்புலன்ஸிலேயே ஆண் மருத்துவ உதவியாளர் வட மாநில கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. கர்ப்பிணி ஆன நாளிலிருந்து இதுவரை மருத்துவ பரிசோதனையே செய்யாத, வட மாநிலப் பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் 3 கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தை பிறந்துள்ளது.


வடமாநில கர்ப்பிணிப் பெண்


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆரனெரி கிராமத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுனாராம் தனது மனைவி புதனி (35) மகள் மோத்தி(3) ஆகியோருடன் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் புதனி கர்ப்பம் தரித்த நாள் முதல் தன்னுடைய அறியாமையினால் மருத்துவ பரிசோதனையே செய்யாமல் இருந்துள்ளார். இன்று அதிகாலை புதனிக்கு இடுப்பு வலி ஏற்பட்டுள்ளது. உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். 


ஆம்புலன்ஸிலே நடைபெற்ற பிரசவம்


தகவல் அறிந்து விரைந்து சென்ற ஓட்டுநர் காளிதாசன் மற்றும் மருத்துவ உதவியாளர் மணிகண்டன் ஆகிய இருவரும் புதனியை 108 ஆம்புலன்ஸில் ஏற்றியுள்ளனர். ஆம்புலன்ஸில் ஏற்றிய சிறிது நேரத்தில் புதனிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவ உதவியாளர் மணிகண்டன் ஆம்புலன்ஸிலேயே புதனிக்கு பிரசவம் பார்த்துள்ளார். இந்தப் பிரசவத்தில் புதனிக்கு 3 கிலோ எடையுள்ள அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. 


நலமுடன் தாய் - சேய்


மேலும் ஆண் மருத்துவ உதவியாளர் மிகவும் துரிதமாக செயல்பட்டு இதுவரை எந்த மருத்துவ பரிசோதனையும் செய்யாத வடமாநில கர்ப்பிணிக்கு சுகப்பிரசவத்தில், ஆண் குழந்தை பிரசவிக்க செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தாயும் சேயும் நலமுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிரசவத்தின் போது சாய்சே இறப்பு சதவீதத்தை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை சார்பில் செய்து வருகின்றனர். அதேபோன்று விவாகரத்துறையில் முன்னணி மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்கி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸில் பிரசவம் நடைபெறுவது தாயும் சேயும் நலமுடன் இருப்பதும் பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.