“முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும்” என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் அறிவிப்பில், “மருத்துவமனை வாசம் முடிந்து இன்று பணிக்கு திரும்பினேன். நலமாக இருக்கிறேன். என்னை தன் சொந்த சகோதரன் போல் கவனித்து சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், என் இரு மகள்கள், ஊன் உறக்கமின்றி உடனிருந்து கவனித்துக்கொண்ட என் அணியினருக்கும் தம்பி மகேந்திரனுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நான் விரைந்து நலம்பெற வேண்டுமென வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், சீமான், அன்புமணி ராமதாஸ், புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி, உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் நன்றிகள்.
என் ஆருயிர் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சகோதரர் இசைஞானி இளையராஜா, வைரமுத்து, சத்யராஜ், சரத்குமார், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட திரை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் நன்றிகள்.
என்னுடைய விடுப்பை திறம்பட சமாளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் விக்ரம் பட குழுவினருக்கும் பிக்பாஸ் அணியினருக்கும், விஜய் டிவி நண்பர்களுக்கும் நன்றிகள்.
நான் விரைந்து குணமடைய வேண்டும் என ஆலயங்கள், தேவாலயங்கள், மசூதிகளில் பூஜைகள், பிரார்த்தனைகள், தொழுகைகள் நடத்தி, அன்னதானம், ரத்த தானம் செய்த எனது ரசிகர்கள், உறவினர்கள், தமிழக மக்களுக்கு நன்றிகள். பிரார்த்தனைகளுக்கு பலன் உண்டா என எனக்குத் தெரியாது. ஆனால் உங்கள் அன்பின் வலிமை அறிந்தவன் நான். உங்கள் தூய பேரன்பு அல்லவா என்னை கொரோனாவிலிருந்து கரை சேர்த்திருக்கிறது.
என் மீது அக்கறை கொண்ட மனங்களுக்கு நன்றி. உதவிய உள்ளங்களுக்கும், கலங்கிய கண்களுக்கும் தொழுத கரங்களுக்கும் நன்றி. உன்னத உறவுகளை தந்த வாழ்க்கைக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.