இந்திய அரசின் அணுசக்தித் துறையின் (DAE) கீழ் கல்பாக்கத்தில் மதராஸ் அணுமின் நிலையம் (MAPS), இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR), மற்றும் 06.04.2026 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க முதல்கிரிட்டிக்காலிட்டி நிலையை எட்டிய 'பாவினி' (BHAVINI) நிறுவனத்தின் முன்மாதிரி வேக ஈனுலை (PFBR) உள்ளிட்ட முக்கிய அணுசக்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

Continues below advertisement

அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் (AERB) விதிமுறைகளின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒருங்கிணைந்த வெளித்தள (Off-Site) அவசரநிலைப் பயிற்சி, இன்று (17.07.2026) கல்பாக்கம் வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அணுமின் நிலையங்கள் "Defence in Depth" எனப்படும் பல அடுக்கு பாதுகாப்பு தத்துவத்தின்படி இயங்குவதால் இத்தகைய அவசரநிலைகள் ஏற்பட வாய்ப்பு மிகக் குறைவு என்றாலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் அணுசக்தி வளாகத்தின் தயார்நிலையை மதிப்பிடுவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் திட்டமிடப்பட்ட பயிற்சி

இந்தப் பயிற்சி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரும், சம்பவக் கட்டளைத் தலைவருமான (Incident Commander)  மு. வீரப்பன், தலைமையில், மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை (DDMA) மூலம் நடத்தப்பட்டது. இதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை கல்பாக்கம் அவசர நிலை குழுவின் (KEC) தலைவர் எஸ். பி. செல்வகுமரன் மற்றும் PFBR நிலைய இயக்குநர் அல்லு அனந்த் ஆகியோர் வழங்கினர்.

Continues below advertisement

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வண்ணம், ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாடு மற்றும் மீட்பு (ICCR) முறையில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. பயிற்சியின் காலவரிசை முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததால், அதிகாரிகள் இயல்பான சூழலைப் போலவே துரிதமாகச் செயல்பட்டனர். அதேநேரம், தேவையற்ற அச்சத்தைத் தவிர்க்க ஊடகங்கள் வாயிலாக முன்னரே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

கற்பனைச் சூழலும் மீட்பு நடவடிக்கைகளும்

பயிற்சியின் போது, PFBR அணு உலையில் ஏற்பட்டதாகக் கருதப்பட்ட ஒரு கற்பனை நிகழ்வு (Notional), பின்னர் வெளித்தள அவசரநிலையாக மாற்றப்பட்டது. நிலைமை தீவிரமடைந்ததை அடுத்து, தள அவசரநிலை இயக்குநர் (SED) கொடுத்த தகவலின்படி, செங்கல்பட்டு மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை களத்தில் இறங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்போதைய வானிலைச் சூழலைக் கருத்தில் கொண்டு ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னர், மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் (BARC) தேசிய கதிர்வீச்சு அவசரநிலைப் பதிலளிப்பு இயக்குநர் தேவையான ஆலோசனைகளை வழங்கினார். காலை 09.00 மணி முதல் மாலை 04.30 மணி வரை நடைபெற்ற இந்த ஒத்திகையில் ஆரம்பாக்கம், மணமை, கடம்பாடி, மாமல்லபுரம் உள்ளிட்ட 10 கிராமப் பகுதிகள் கற்பனை அடிப்படையில் உட்படுத்தப்பட்டன.

பல்வேறு அரசுத் துறைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் பாராட்டு

இந்த அவசரநிலைத் தயார்நிலைப் பயிற்சியில் மாவட்ட வருவாய்த் துறை, காவல்துறை, சுகாதாரத் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுத் துறைகளும், அரக்கோணத்தைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படையும் (NDRF) இணைந்து செயல்பட்டன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் (NDMA, SDMA), AERB ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 15 மூத்த அதிகாரிகள் இப்பயிற்சியை நேரில் பார்வையிட்டு, இதன் செயல்பாடுகள் மிகவும் திருப்திகரமாக இருந்ததாகப் பாராட்டினர். பயிற்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மு. வீரப்பன், இந்த ஒத்திகை மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுத் திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும், பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு எந்தப் பாதிப்பும் இன்றி இது மிகக் கவனமாக நடத்தி முடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.