கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் மாணவி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி வேண்டும் என்று கூறி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் தொடர்புடையவர்கள் என 300 பேரை சின்னசேலம் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் 20 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து, பள்ளியில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் கலவரத்தில் ஈடுபட்டதாக பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமம் தட்சிணாமூர்த்தி மகன் சஞ்சீவ் (வயது 22), சின்னசேலம் அருகே தகரை மெயின் ரோட்டை சேர்ந்த ஆறுமுகம் மகன் பாலாஜி (23), தியாகதுருகம் அடுத்த புதுபல்லகச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் பரமேஸ்வரன்(22), வேப்பூர் சேப்பாக்கம் நடுத்தெருவை சேர்ந்த கொளஞ்சி மணி மகன் விஜய் (28), கச்சராபாளையம் அடுத்த மட்டப்பாறை ஏழுமலை மகன் துரைப்பாண்டி(20), வேப்பூர் அருகே காசாக்குடி கிராமம் மேற்கு தெருவை சேர்ந்த குமரவேல் மகன் அய்யனார் ஆகியோரை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் கலவரத்தில் முடிந்தது. இது தொடர்பாக சின்னசேலம் காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகள் பதிவுகளின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்ட போலீஸார் 128 பேர் மீது 147 (சட்ட விரோதமாக கூடுதல்),148(ஆயுதங்களுடன் கூடுதல்) , 294(b) (ஆபாசமாக பேசுதல்), மற்றும் 323,324, 352, 332, 336, 435, 436,379,IPC.r/w.3,4,5.of பொதுச் சொத்தை சேதப்படுத்துதல், உள்ளிட்ட 14 பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கள்ளக்குறிச்சி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முகமது அலி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் 20 சிறுவர்கள் கடலூர் கூர்நோக்கு சிறார் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 108 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க பொறுப்பு நீதிபதி முகமது அலி உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அனைவரும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்