கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற, கள்ளச் சந்தையில் கிடைத்த விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம், இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இரவு அரசு அறிவித்த அதிகாரப்பூர்வ தகவலின்படி, கள்ளக்குறிச்சியில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் சேர்ந்த 159 பேர் விஷச்சாராயம் குடித்ததில் பாதிப்படைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  


பாதிப்பு அடைந்தவர்கள் எவ்வளவு பேர் ? 


கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 39 பேர் உயிரிழந்ததாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கருணாபுரம் பகுதியில் 23 பேரும், கள்ளக்குறிச்சி நகர் பகுதியில் சேர்ந்த 5 பேரும், மொத்தம் 39 பேர் உயிரிழந்ததாக அரசு அறிவித்த அதிகாரப்பூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 16 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 66 பேரும், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 36 பேரும், விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் இரண்டு பேரும் என 120 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


ஜிப்மர் பாண்டிச்சேரி மருத்துவமனையில் 3 பேர், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 22 பேர், சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 10 நபர்கள், விழுப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நான்கு பேர் என மொத்தம் 39 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில் ஆண்கள் 149 பேரும், பெண்கள் 9 பேரும், திருநங்கை ஒருவரும் என 159 பேர் பாதிப்படைந்த நிலையில், ஒரு திருநங்கை, நான்கு பெண்கள் மற்றும் 34 ஆண்கள் உயிரிழந்துள்ளனர்


ஒரு நபர் விசாரணை ஆணையம்


தமிழ்நாடு அரசு இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் இந்த ஆணையும் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. இதுபோக இது தொடர்பாக மூன்று நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர், 20க்கும் மேற்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிடம் மாற்றமும், காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போக கடமையை செய்ய தவறியதாக ஒன்பது அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது


எஃப் ஐ ஆர் - இல் இருப்பது என்ன ?



கடந்த 18ஆம் தேதி இரவு 7 மணிக்கு கருணாபுரம் சுடுகாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாகவும், 19ஆம் தேதி காலை சேகருக்கு வயிற்றுவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதாகவும், இவரை தொடர்ந்து 20 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை கண்ணுக்குட்டி, தம்பி தாமோதரன், கண்ணுக்குட்டியின் மனைவி விஜயா விற்றுள்ளனர். இது தொடர்பாக 304(2), 328, உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றம் செய்யும் நோக்கத்துடன் விஷம் போன்ற பொருட்களால் காயம் ஏற்படுத்துதல் பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் முதல் தகவல் அறிக்கையில் முன் கன்னுக்குட்டி, பிரவீன் குமார், மற்றும் விஜய் ஆகிய மூன்று பேரிடம் சாராயம் வாங்கி குடித்த எங்கள் பகுதியை சேர்ந்த மகேஷ் கண்ணன் மற்றும் இருவதற்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்ததின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.