Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் மேலும் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.


30 பேர் கவலைக்கிடம்:


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட நபர்களை, மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், “விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட 165 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 47 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஷச்சாராய விற்பனையை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பலருக்கு ரத்தத்தில் மெத்தனால் கலந்து இருப்பதால், அவர்களது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


அடுத்தடுத்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்:


கடந்த புதன்கிழமை அன்று நண்பகலில் கள்ளச்சாராயம் அருந்திய 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து அன்று மாலைக்குள் மேலும் 12 பேர் வரை உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வாந்தி, கண் எரிச்சல் போன்ற உபாதைகளுடன் நூற்றுக்கும் அதிகமானோர் கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று உயிரிழந்தனர். இந்நிலையில்தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் சுமார் 5 பேர் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.


உயிரிழந்தவர்கள் விவரம்:


இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அதிகபட்சமாக 27 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுபோக, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரியில் 3 பேரும் என மொத்தமாக 49 பேரை கள்ளச்சாராயம் காவு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இரவு வரை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில்  11 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது நாகபிள்ளை, பாலு  வீரமுத்து, ராஜேந்திரன்- s/o கோவிந்தராஜன், ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை சேலத்தில் மொத்தமாக 15 ஆக அதிகரித்துள்ளது.  தொடர்ந்து 32 பேர்  தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 பேர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.