கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூற வந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், யூடியூபர் சாட்டை துரைமுருகனை அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


யூடியூபர் சாட்டை துரைமுருகன் 


நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், சாட்டை என்ற பெயரில் யூடியூப் நடத்தி வரும் சாட்டை துரைமுருகன் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் வீடுகளில் சென்று ஆறுதல் கூறுவதற்காக காரில் சென்றிருந்தார். அப்பொழுது சாட்டை துரைமுருகன் காரில் இருந்து இறங்கிய சில நிமிடங்கள் அங்கிருந்த சிலர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 


கள்ளக்குறிச்சியில் நடந்த இந்த விஷச்சாராய சாவு தொடர்பாக அவர் அண்மையில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்  குறித்தும், அந்த பகுதியில் நடக்கும் அந்த கள்ளச்சாராய வியாபாரம் குறித்தும் பல்வேறு சர்ச்சைக்குரிய முறையில் பேசி இருந்ததாக கூறி வாக்குவாதம் செய்தனர்.


இந்த வாக்குவாதம் முற்றியதில் ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டனர். சிலர் சாட்டை துரைமுருகனை சூழ்ந்து கொண்டு தாக்க முயன்றனர். பின்னர் அவரும் பதிலுக்கு தாக்கி முயன்றார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை சரியில்லாததை தெரிந்து கொண்டு அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகனை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.



 


கள்ளக்குறிச்சியில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்:


கடந்த புதன்கிழமை அன்று நண்பகலில் கள்ளச்சாராயம் அருந்திய 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து அன்று மாலைக்குள் மேலும் 12 பேர் வரை உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வாந்தி, கண் எரிச்சல் போன்ற உபாதைகளுடன் நூற்றுக்கும் அதிகமானோர் கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று உயிரிழந்தனர். இந்நிலையில்தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் சுமார் 5 பேர் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.