கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி சிலர் பலியான நிலையில், இறப்பு நிகழ்வுக்கு வந்தவர்களுக்கு கள்ளச் சாராயம் கொடுக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. கள்ளச் சாராயத்தால் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் அவசர சிகிச்சைப் பிரிவில் கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே கள்ளச்சாராயத்தை ஒழிக்கத் தவறியதற்காக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவண் குமார் இடமாற்றம் செய்யப்பட்டார். மாவட்ட எஸ்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஏன் அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை?
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் ஊராட்சி மன்றத் தலைவர், பஞ்சாயத்துத் தலைவர், கிராம நிர்வாக அதிகாரி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று இணையதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், விஷச் சாராய வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும். குண்டர் சட்டத்தில் அவர்கள் கைது செய்யப்படவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னாள் எம்.பி.யும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.சி.பழனிச்சாமி விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகள்:
’’விஷச் சாராயம் தொடர்பாக தற்போது நடைபெறுகிற சட்டமன்ற கூட்டத்ததொடரில் அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைந்து ஏகமனதாக கீழ்க்கண்ட திருத்தங்களை மேற்கொள்வார்களா?
* விஷச் சாராய வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும்.
* குண்டர் சட்டத்தில் அவர்கள் கைது செய்யப்படவேண்டும்.
* சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து, கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்.
* அந்த எல்லைக்குட்பட்ட சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு துறை அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் பணியிடை நீக்கம் செய்யப்படவேண்டும். மீண்டும் அவர்களை பணியில் அமர்த்தும்போது பணியிறக்கம் செய்ய வேண்டும்.
* TASMAC கடைகளை ஒட்டி இருக்கும் அனுமதிபெற்ற பார்களைத் தவிர வேறு எங்கு மது விற்பனை நடைபெற்றாலும் மேற்கண்ட நடவடிக்கைகளை அவர்கள் மீதும் எடுக்கவேண்டும்.
* கஞ்சா, குட்கா, Cool Lip மற்றும் பிற போதைப்பொருட்களை விநியோகிப்பவர்கள் மற்றும் விற்பவர்கள் மீதும் இதே நடவடிக்கைகள் பாய வேண்டும்.
ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் உங்கள் ஆட்சியில்தான் இப்படி என்று மாற்றி மாற்றி குற்றச்சாட்டு சுமத்திக்கொள்வதைத் தவிர்த்து, ஆக்கபூர்வமாக ஒருங்கிணைந்து இந்த திருத்தங்களை நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றுவார்களா?’’
இவ்வாறு கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.