கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து உயர்ந்த பகுதியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ நேரில் விசாரணை மேற்கொண்டார்.


கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 61 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. மேலும் சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர்.


இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் 2பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில்,  கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறது. விஷ சாராய சம்பவத்தில் 6 பெண்கள் பலியாகி இருப்பதை குறிப்பிட்டுள்ள மகளிர் ஆணையம், அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது.


இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கருணாபுரம் கிராமத்தில் தேசிய மகளிர் ஆணையக்குழு உறுப்பினர் குஷ்பு மற்றும் 3 பேர் கொண்ட விசாரணை குழு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டது. மேலும் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.


விஷ சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும். பெண்கள் சாராயம் குடிக்கும் அளவிற்கு கள்ளக்குறிச்சி போலீஸ் என்ன செய்தது?.  விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டதில் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என கூறினார்.