"கள்ளச்சாராயத்திற்கு பேர்போன கல்வராயன் மலை"


கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இதனை அவ்வப்போது போலீசார் பெயரளவில் மட்டுமே சாராய ஊரல்களை அழித்து வீடியோவாக வெளியிடுவர். இதேபோல்தான் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன சோதனை என்ற பெயரில் பெயரளவில் மட்டுமே சோதனை நடத்தி வருகின்றனர். 

காவல் நிலையம் அருகே தில்லாக விற்பனை செய்த கள்ளச்சாராய வியாபாரி


இந்த நிலையில் தான் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் உள்ள காவல் நிலையம் அருகே பிரபல சாராய வியாபாரி கோவிந்தராஜ் என்பவர் நீண்ட வருடங்களாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். குறிப்பாக நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வெளிப்படையாக கள்ளச்சாராயம் விற்று வரும் நபராக வலம் வந்துள்ளார். இவர் இரவு பகல் என்று பாராமல் முழு நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதில் கில்லாடியாக இருந்துள்ளார். இத்தகைய சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பாளர், மற்றும் காவல் நிலையத்திலும் பலமுறை புகார் அளித்தனர். 

 

இதுபோன்ற கள்ளச்சாராயம் விற்பனை குறித்து புகார்  வரும்போதெல்லாம்  போலீசார் கணக்குக்காக யாரையாவது ஒருவரை கைது செய்து சிறையில் அடைப்பதை வழக்கமாக வைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு அடுத்தடுத்து வந்த வாந்தி மயக்கம்...


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் நேற்று இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டு வாந்தி, மயக்கத்தால் கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில்,பிரவீன்(29), சுரேஷ்(46), சுரேஷ் (45), சேகர்(61) ஆகியோர் உயிரிழந்தனர். இதையடுத்து, மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 19 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 

கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் என்பவரை கள்ளக்குறிச்சி போலீஸார் அழைத்து விசாரணை நடத்தியதில் கள்ளச்சாராயம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் புதன்கிழமை அதிகாலை வரை விற்பனை செய்யப்பட்டு வந்ததாகவும், செவ்வாய்க்கிழமை பகலில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் இரவு பாதிப்புக்குள்ளாகி இன்று உயிரிழந்துள்ளனர். மேலும், இன்று அதிகாலை வரை கள்ளச்சாராயம் குடித்த பலர், பாதிப்புக்குள்ளாகி தொடர் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

தற்போது வரை உயிரிழந்தவர்களின் பெயர்கள் :


 

1.சுரேஷ் , 2.பிரவீன் , 3.சேகர், 4.கந்தன், 5.ஆறுமுகம், 6.ஜெகதீஷ், 7.மணிகண்டன், 8.மணி 9.கிருஷ்ணமூர்த்தி, 10.இந்திரா. 11.நாராயணசாமி 12. ராமு 13. சுப்பிரமணி

 

மேலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 16 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 16 பேரும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர் இந்த நிலையில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்டோர் தற்பொழுது  அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு போலீசார் மற்றும் கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீசார் என சுமார் 10 இருக்கும் மேற்பட்டோரை பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. 

இரவோடு இரவாக பிரேத பரிசோதனை


கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உடல்களை இரவோடு இரவாக பிரேத பரிசோதனை செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்பொழுது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். உடற்கூறு ஆய்வுக்காக சேலம் விழுப்புரம் என அரசு மருத்துவமனைகளுக்கு இறந்தவர்களின் உடல்களை அனுப்பி வைத்துள்ளனர்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தற்போது மரண ஓலத்தில் இருப்பதனால் பொதுமக்கள் அதிர்ச்சியிலும், மிகுந்த சோகத்திலும் உள்ளனர். மேலும் அப்பகுதியில் ஏதும் பதற்றம் நிலவாமல் இருக்க காவல்துறை சார்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.