Jayakumar On kallakurichi illicit liquor: நடிகர் விஜய் மட்டுமே வளர்த்துவிட்ட தமிழர்களுக்காக குரல் கொடுத்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்:
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும் சாலைகளிலும் கதறி கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கிறது! இத்தனைக்கு பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை! நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்துவிட்ட தமிழர்களுக்கு இடர்நேரங்களில் துணை நிற்க வேண்டும் என உணர்ந்து குரல் கொடுத்துள்ளார்! மீதமுள்ளவர்கள் யாரை கண்டு அஞ்சுகின்றனர்? ஏழை எளிய மக்கள் 200.ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதால் தான் நீங்கள் 100 கோடி,200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள். அந்த மக்களுக்கு இது போன்ற நேரங்களில் ஆதரவை கொடுக்க வேண்டிய சமூக பொறுப்பு உங்கள் அனைவருக்கும் கட்டாயம் இருக்கிறது. மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!” என குறிப்பிட்டுள்ளார்.
குரல் கொடுக்காத நடிகர்கள்..!
அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு பிரச்னைகளுக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் வெளிப்படையாக குரல் கொடுத்தனர். குறிப்பாக சூர்யா, கார்த்திக், பிரகாஷ்ராஜ், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களும், வெளிப்படையாக அதிமுக அரசை விமர்சித்து இருந்தனர். குறிப்பாக அதிமுக ஆட்சி காலத்தில் நீட் தேர்வு தொடர்பாகவும், மருத்துவமனைகளின் நிலை குறித்தும் சூர்யா மற்றும் ஜோதிகா பேசியது பெரும் பேசுபொருளானது. ஆனால், திமுக ஆட்சி வந்த பிறகு திரையுலகை சேர்ந்தவர்கள், சமூக பிரச்னைகள் தொடர்பாக கருத்து சொல்வதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இந்நிலையில் தான், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் அருந்தி 30-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், விஜய் மற்றும் இயக்குனர் பா. ரஞ்சித்தை தவிர, தமிழ் திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் யாருமே இதுபற்றி கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தான், தமிழ் திரையுலகினர் யாரை கண்டு அஞ்சுகின்றனர் என, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.