கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 59 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி என பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் தமிழகத்தின் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளச்சாராய விவகாரம்:
கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று தமிழக முழுவதும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்கித் தவறிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் ஒருங்கிணைந்த தேமுதிக சார்பில் கோட்டை மைதானம் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மாநகர மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.
சி.பி.ஐ. விசாரணை:
இதைத் தொடர்ந்து தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "தமிழகம் தற்போது போதை மாநிலமாக உருவாகியுள்ளது. டாஸ்மார்க் கடை மற்றும் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் அதிக அளவில் உள்ளன. அதைவிட ஒரு படி மேலாக தடை செய்யப்பட்ட கள்ளச்சாராய விற்பனை தமிழகத்தில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகுளம் பகுதியில் விஷ சாராயம் அருந்தி இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். பல பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் திமுக அரசு தான் என்றும் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தவறிய தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். மேலும் இந்த சம்பவத்திற்கு உரிய விசாரணை நடத்தை குற்றவாளிகளை தகுந்த தண்டனை அளிக்கும் வகையில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.