கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி சிலர் பலியான நிலையில், இறப்பு நிகழ்வுக்கு வந்தவர்களுக்கு கள்ளச் சாராயம் கொடுக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. கள்ளச் சாராயத்தால் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் அவசர சிகிச்சைப் பிரிவில் கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே கள்ளச்சாராயத்தை ஒழிக்கத் தவறியதற்காக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவண் குமார் இடமாற்றம் செய்யப்பட்டார். மாவட்ட எஸ்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்கட்டமாக ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
உயர் கல்வி வரை இலவசம்
இதற்கிடையே தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''பெற்றோர் இருவரையும் இழந்து வாடும் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை ஆகும் செலவுகளை அரசே முழுமையாக ஏற்கும், 18 வயது ஆகும் வரை அவர்களுக்கு மாதாமாதம் ரூ. 5 ஆயிரம் பராமரிப்புத் தொகை வழங்கப்படும். வங்கியில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி செலுத்தப்படும். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து இந்தத் தொகை வழங்கப்படும்.
வங்கியில் வைப்பு நிதி
பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு வங்கியில் ரூ.3 லட்சம் வைப்பு நிதி செலுத்தப்படும். இந்தக் குழந்தைகளுக்கு அரசின் நலத்திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும். விஷச் சாராயத்தால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வரை கூடுதல் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். இந்த சம்பவம் குறித்து அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
இதற்கிடையே கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று இந்த கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.