கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஒட்டுமொத்த அரசியல் கட்சி தலைவர்கள் அங்கு படையெடுத்து வருகின்றனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 37 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் அவர்களின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். 


இதனிடையே இந்த வழக்கானது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 


விசாரணை ஆணையம் 3 மாதங்களுக்குள் முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும் என்றும், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கும் அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் மெத்தனால் கலந்த சாராயம் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 


கள்ளக்குறிச்சி படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்


இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் செல்வதாக அறிவித்துள்ளனர். மக்களை சொல்லா துயரில் ஆழ்த்தியுள்ள கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளனர். 


இதனால் இந்திய அளவில் தமிழ்நாடு கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசு இவ்விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் வரும் காலம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்திக்க நேரிடலாம் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். 


விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 


ஆனால் அரசியல் கட்சியினர் அனைவரும் கள்ளக்குறிச்சிக்கு படையெடுப்பது ஜூலை 10 ஆம் தேதி  அம்மாவட்டத்திற்கு அருகில் இருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடப்பதால் தான் என சமூக வலைத்தளங்களில் பலரும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தை அரசியலாக்கி மக்களின் வாக்குகளை அள்ளி விடலாம் என நினைப்பதாகவும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.