Kalaignar Womens Assistance Scheme: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என  தமிழ்நாடு  அரசு அறிவித்துள்ளது. 


கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்


கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு  கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் எனவும் அனைத்து நியாய விலை கடைகளிலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தில் பயன் அடைய விண்ணப்பிக்கும் போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம். வரும் 17ஆம் தேதிக்குள்ளாக அனைத்து நியாய விலை கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்ய அனைத்து துணை ஆணையர்களுக்கும் உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.


தகுதிகள் என்னென்ன?


தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அடங்கியுள்ள தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம்  முக்கியமானது ஆகும்.  இந்த திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி நடைமுறை படுத்தப்படவுள்ளது.  இந்தி திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை தமிழக அரசு வரையறை செய்து வெளியிட்டிருந்தது.


அதில், பெண்கள் தங்கள் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் தான் இந்த உரிமைத் தொகையை பெறுவதற்காக விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பயனாளிக்கு 21 வயது பூர்த்தியாகி இருக்க  வேண்டும். ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு கீழ் இருக்கும் குடும்பத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் போன்றவற்றை தமிழக அரசு அறிவித்திருந்தது. 


மேலும், திருநங்கைகள், திருமணமாகாதவர்கள், தனித்து இருப்போர், கைம்பெண்கள்  தலைமையில் குடும்பம் இருந்தால் அவர்கள் குடும்பத்தலைவிகளாக கருதப்பட்டு அவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில், கடும் உடல் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


யாருக்கெல்லாம் உரிமைத்தொகை இல்லை


ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்க அரசு முடிவு. சொந்தமாக கார், டிராக்டர், ஜூப், கனரக வாகனம் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக கொண்டிருப்போருக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடையாது.


ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் வருவாய் பெறும் குடும்ப தலைவிகளுக்கு உரிமைதொகை கிடைக்காது. 5 ஏக்கர் மற்றும் அதற்கும் அதிகமான நன்செய் நிலம் வைத்து இருக்கும் குடும்ப தலைவிகளுக்கும், 10 ஏக்கர் புன்செய் மற்றும் அதற்கு அதிகமான நிலம் வைத்திருக்கும் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத் தொகை இல்லை. பெண் எம்.எல்.ஏ., எம்.பி. மற்றும் பெண் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படமாட்டாது. ஆண்டுக்கு 3600 யூனிட்க்கும் அதிகமான மின்சாரத்தை நுகர்வு செய்யும் குடும்பங்களுக்கு உரிமைத் தொகை கிடையாது என்று தெரிவித்திருந்தது.