'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்திற்கான மாதிரி விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டதைப் போலவே, தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத்தொகையை பயனாளிகள் பெறுவதற்கான தகுதிகள் குறித்த தகுதி விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. இப்போது விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவம்:
இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான மாதிரி விண்ணப்பப் படிவத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2 பக்கங்கள் கொண்ட விண்ணப்ப படிவத்தில் 13 பிரிவுகளில் விவர குறிப்புகள் பற்றி கேட்கப்படடுள்ளன. தொலைபேசி எண், வசிப்பது சொந்த வீடா அல்லது வாடகை வீடா, சொத்து நில உடமை, வாகனம், குடும்ப உறுப்பினர்கள் விவரம், திருமண நிலை, வங்கி விவரம், உள்ளிட்ட விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண இரசீது, வங்கி பாஸ் புத்தகம் எடுத்து வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
தகுதிகள் என்னென்ன:
அதன்படி, ”மகளிர் உரிமைத்தொகையை பெற விரும்பும் பயனாளிகளுக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். மகளிர் உரிமைத் தொகைக்கும் விண்ணப்பிக்கும் மகளிர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் அவசியம்
அதே நேரம், உச்ச வயது ஏதுமில்லை. ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்க அரசு முடிவு. சொந்தமாக கார், டிராக்டர், ஜூப், கனரக வாகனம் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக கொண்டிருப்போருக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடையாது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் வருவாய் பெறும் குடும்ப தலைவிகளுக்கு உரிமைதொகை கிடைக்காது. 5 ஏக்கர் மற்றும் அதற்கும் அதிகமான நன்செய் நிலம் வைத்து இருக்கும் குடும்ப தலைவிகளுக்கும், 10 ஏக்கர் புன்செய் மற்றும் அதற்கு அதிகமான நிலம் வைத்திருக்கும் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத் தொகை இல்லை. பெண் எம்.எல்.ஏ., எம்.பி. மற்றும் பெண் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படமாட்டாது.
மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மட்டும் இல்லாமல், பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதார்களுக்கு இத்திட்டத்தின் கீழ் உரிமைத் தொகை வழங்கப்படமாட்டாது. வருமானவரி செலுத்துவோர், அரசின் வேறு நிதி உதவித் திட்டங்களில் பலன் பெறும் மகளிர் இந்த திட்டத்தில் பலன் பெற முடியாது. ஆண்டுக்கு 3600 யூனிட்க்கும் அதிகமான மின்சாரத்தை நுகர்வு செய்யும் குடும்பங்களுக்கு உரிமைத் தொகை கிடையாது.
திருநங்கைகள், திருமணமாகாதவர்கள், தனித்து இருப்போர், கைம்பெண்கள் தலைமையில் குடும்பம் இருந்தால் அவர்கள் குடும்பத்தலைவிகளாக கருதப்பட்டு அவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கடும் உடல் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ, அந்த கடையில் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.