TNEB: மின்மாற்றிகள் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. 


புகார்


தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.397 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த காலக்கட்டத்தில் 45 ஆயிரம் டிஸ்ட்ரிபியூஷன் ட்ரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்வதற்காக ஒப்பந்தங்கள் கோரப்பட்டது. இதற்கான டெண்டர் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திறக்கப்பட்டது.  


பல கெபாசிடியில் இந்த ஒப்பந்தங்கள் கோரப்பட்ட நிலையில், அனைத்திலும் ஒரு ரூபாய் கூட மாறாமல் ஒரே விலையில் 30 ஒப்பந்தந்தாரர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த டெண்டர் பணிகளில் முறைகேடு நடந்ததுள்ளதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. 


மின்வாரியம் விளக்கம்


மின்மாற்றிகள் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ”தமிர்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மின்மாற்றிகளை விற்பனை செய்து வருகின்றன. கடந்த 2011-ம் ஆண்டு முதல் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்ட கோப்புகளை பரிசீலனை செய்ததில் பெரும்பாலான
நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியை சமர்ப்பித்துள்ளது தெரியவருகிறது.


மின்மாற்றிகள் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும், சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை உள்ள 44 மின் பகிர்மான வட்டங்களுக்கு மின்மாற்றிகளை எடுத்து சென்று வழங்குவதால், அவை சரக்கு வாகன கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும், சில நிறுவனங்கள் உள்ளூரிலேயே பல வருடங்களாக இயங்கி வருவதால், அவர்களுக்கு மற்ற நிறுவனங்களின் விலைப்புள்ளிகள் குறித்து தெரிய வாய்ப்புள்ளது.


"தனித்துவம் வாய்ந்தது”


மின்மாற்றி தயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மாதிரி விலைப்புள்ளி கோருவது கடந்த இரு ஆண்டுகளில் நிகழும் நிகழ்வுகள் அல்ல. இந்த நடைமுறை, கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகவே பின்பற்றப்பட்டு வருகிறது.  தமிழ்நாடு அரசு மின்வாரியத்தால் கொள்முதல் செய்யப்படும் மின்மாற்றிகள் உத்தரவாத காலம் 5 ஆண்டுகள் ஆகும். கேரளா மாநிலத்தில் கொள்முதல் செய்யப்படும் மின்மாற்றிகளுக்கான உத்தரவாத காலம் 3 ஆண்டுகள் ஆகும். தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்யும் மின்மாற்றிகளின் விவரக் குறியீடு முற்றிலும் தனித்துவம் வாய்ந்தது. ஆகவே கேரள மாநிலத்தில் கொள்முதல் செய்யும் மின்மாற்றிகளோடு ஒப்பீடு செய்ய இயலாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்முதல் செய்யப்படும் மின்மாற்றிகளின் விவரக் குறியீடுகள், தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்யும் மின்மாற்றிகளின் விவரக் குறியீடுகள் வெவ்வேறாக உள்ளது. நீண்ட கால பயனை கருத்தில்கொண்டு காப்பர் மின்சுருள், 5 வருட உத்தரவாதம், மின்சார வாரியம் நிர்ணயம் செய்யப்படும் விவரக் குறியீடுகளின் அடிப்படையிலேயே நிறுவனங்கள் மின்மாற்றிகளை உற்பத்தி செய்து வழங்குவதால், தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்யும் மின்மாற்றிகளின் தரம் உயர்வாக இருக்கிறது. எனவே, எந்த நிலையிலும் முறைகேடுகள் நடைபெறுவதை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.