கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மணிப்பூர் கலவரம் 3 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடிக்கிறது. இன்னும் அக்கலவரம் கட்டுப்படுத்தப்படவில்லை. இது மெய்தி, குக்கி என்ற இரு பிரிவினரிடையேயான மோதல் என்கின்றனர். ஆனால் இந்த கலவரத்தை தூண்டிவிடுவதே மணிப்பூர் மாநில பா.ஜ.க அரசு தான். மணிப்பூர் மலைகளில் இருந்து குக்கி மக்களை அகற்றிவிட்டு அம்பானி, அதானிக்கு தாரைவார்க்கவே இது போன்ற செயல்களில் பா.ஜ.க  ஈடுபடுகின்றது. மணிப்பூர் முதல்வரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு தயாராக இல்லை. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யவிலை. மணிப்பூர் முதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மணிப்பூர் மக்களுக்கு 10 கோடி ரூபாய் மதிப்புடைய பொருட்களை கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இருப்பதை வரவேற்கிறோம்.


ஐவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக நமது ஆயத்த ஆடைகளை பிற நாடுகள் வாங்க தயாராக இல்லை. பங்களாதேஷ் ஆடைகள் இங்கே விற்பனை செய்யப்படுவதால், தொழில்களே முடங்கிப்போகும் நிலை இருக்கிறது. ஆனால் இவற்றைப் பற்றி மத்திய அரசு கண்டு கொள்வதே இல்லை. பிரதமர் பாராளுமன்றத்திற்கு வந்து பதில் சொல்வதே இல்லை. பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார் என்றால்,  அவர் என்ன பிரதமர்? நாடகம் நடிப்பதை போன்ற ஆட்சி நடக்கிறது.




அண்ணாமலை பாதயாத்திரை துவக்கி வைக்க அமித்ஷா தமிழகம் வருகின்றார்.  உள்நாட்டு பிரசரசினைகளை பற்றி கவலைப்படாமல் அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஹரியானாவிலும் கலவரம் நடக்கிறது. ரயிலில் மனநிலை பாதிக்கப்பட்ட காவலரால் எப்படி முஸ்லீமாக பார்த்து சுட முடிந்தது? இது போன்ற செயல்களை கட்டுப்படுத்த முடியாமல் உள்துறை அமைச்சராக அமித்ஷா எதற்கு பதவி நீடிக்க வேண்டும்? திமுக அரசை விமர்சிக்கும் தார்மீக உரிமை அமித்ஷாக்கு எங்கே இருக்கின்றது? பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் நகைப்பிற்குரியதாக இருக்கிறது. சிறிது தூரம் நடந்து, பின்னர்  சொகுசு வாகனத்தில் செல்வது, பின்னர்  நடப்பது என அண்ணாமலை நடைபயணம் இருக்கின்றது. இது நடைபயணமா? இந்த மாதிரி நடைபயணம் தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் மேற்கொள்ளலாமே? அண்ணாமலை வானத்திற்கும் பூமிக்கும் குதித்தாலும் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. இந்த நடைபயணம் அண்ணாமலை வாழ்க்கை வரலாற்றை எழுத மட்டுமே பயன்படும்.


திமுக தேர்தல் அறிக்கையில் கொடநாடு வழக்கில் சம்மந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார்கள். இந்த வழக்கை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நல்ல கோரிக்கைதான். கொடநாடு வழக்கில் நிறைய மர்ம முடிச்சுகள் இருக்கிறது. அதை வெளிப்படுத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் பதவியை பிரதமர், எதிர்கட்சி தலைவர், உச்ச நீதிபதி ஆகியோர் சேர்ந்து நியமிக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடு நல்லதுதான். சீமான் மாதிரியான ஆட்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. என்றாலும் குறிப்பிட்ட மதம், சாதி சார்ந்த மக்களை தரம் தாழ்த்தி பேசுவது சரியானது அல்ல. அவரது பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை கேவலப்படுத்தும் வகையிலான அவரது  பேச்சு கண்டனத்திற்குரியது.


இந்தியா கூட்டணியின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,  இதை தடுக்கவே பல இடங்களில் கலவரங்களை ஏற்படுத்தி பெரும்பான்மை மக்களை திசை திருப்ப முயல்கின்றனர். மதம் என்ற தோற்றத்தை வைத்து அதன் அடிப்படையில் மக்களை திரட்ட பார்க்கின்றனர், அது முடியாது. பாஜக கூட்டணியில் உள்ள 38 கட்சிகளின் பெயர்களை அந்த கூட்டணி தலைவர்களால் சொல்ல முடியுமா? டெல்லி அரசு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி மத்திய அரசே செயல்படுகின்றது. மாநில உரிமைகளை பறித்து ஓரே அரசு என்று செயல்பட பார்க்கின்றது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கான உரிமைகளை கொடுக்க வேண்டாமா? உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று கொள்கின்றோம் என சொல்லாமல் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. மாநில உரிமைகளை பறிப்பது இந்தியாவை சீர்குலைக்கும். 
மக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் போது சிபிஎம் தொடர்ந்து போராடுகின்றது. மத்திய அரசுக்கு எதிராக ஏன் எஸ்.பி. வேலுமணி வாயை திறப்பதில்லை? அதிமுக ஏன் போராடுவதில்லை? பாஜக என்ற பேராபத்தில் இருந்து பாதுகாக்க திமுக உடன் துணை நிற்கிறோம்” எனத் தெரிவித்தார்.