’சினிமா பார்த்தெ உருப்படமாப் போகப்போற’ என அப்பாவிடம் அர்ச்சனை வாங்காத 90ஸ் கிட்ஸ்கள் இருக்க முடியாது.ஆனால் அதே சினிமாதான் தற்போது ஒரு குற்றவாளியை பிடிக்க உதவியது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதுவும் நமது தமிழ்நாட்டில் அந்தச் சம்பவம் நடந்துள்ளது. 


என்ன நடந்தது?


சென்னை பிராட்வே ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் கமலா- முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததை அடுத்து கமலா தனது 9 வயது மகளை ஒருவருடம் முன்பு கணவரின் உறவினர் வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளார். பின்னர் ஐந்து மாதங்கள் கழித்து மகளைத் தன்னுடன் அழைத்து வைத்துக்கொண்டுள்ளார். அப்போதுதான் தனது மகளுக்கு அந்த உறவினர் வீட்டில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.


இதையடுத்து கமலா தனது மகளுக்கு நேர்ந்தது குறித்து ராயபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கணேசன் என்பவரைக் கைது செய்தனர். 
இதற்கிடையே கடந்த ஓராண்டாக இந்த வழக்கு சென்னை உயர்நிதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையில் கணேசனின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. கணேசனை குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கபப்ட்ட சிறுமிக்கு 2 லட்சம் ருபாய் அரசு நிவாரணம் வழங்கவும் பரிந்துரை செய்துள்ளார்.


குற்றவாளி பிடிபட்டது எப்படி?


கமலா தனது மகளை வீட்டு அழைத்து வந்த நிலையில் வீட்டில் ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தைப் பார்த்துள்ளார். அந்தப் படம் சிறார்களுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமை குறித்தது. அதில் தாயிடம் தனக்கு நிகழ்ந்த கொடுமையை குழந்தை மறைக்கத் தேவையில்லை என்பது போலக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். தனக்கு நிகழ்ந்த குற்றத்தால் மனது ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த சிறுமி இந்தக் காட்சியால் தாக்கம் ஏற்பட்டு தனது தாயிடம் அப்பாவின் உறவினர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டது குறித்து விளக்கியுள்ளார். கொதித்தெழுந்த கமலா உடனடியாக காவல்துறையை நாடினார். 


’பொன்மகள் வந்தாள்’


நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான திரைப்படம் பொன்மகள் வந்தாள். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக் குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிக்கும் நபரை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இதில் ஜோதிகா மூன்று முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பார்.கொரோனா பேரிடர் காலத்தில் இந்தத் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.