பச்சை பலகை, வெள்ளை எழுத்து... இந்த நிறத்தை அறியாத ஆளே இருக்க முடியாது. வீதிக்கு வீதி, சந்துக்கு சந்து எங்கு பார்த்தாலம் நிறைந்திருக்கும் டாஸ்மாக் கடையின் அக்மார்க் அடையாளம் எது. மதுபானத்தை தேடுவோர், பச்சை போர்டு எங்கே இருக்கு என்று தான் முதலில் தேடுவார்கள். அந்த அளவிற்கு அந்த பிராண்ட் குடிமகன்களை சென்றடைந்துவிட்டது. ஆனால் அதே டாஸ்மாக் தீம்மை பயன்படுத்தி, ஒருவர் ஜூஸ்மாக்  நடத்தி கிளை மேல் கிளை திறந்து கொண்டிருக்கிறார். டெல்டாவிலிருந்து புறப்பட்ட இந்த புதிய சிந்தனையின் பின்னணி என்ன? பார்க்கலாம்...




தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் பட்டதாரி சதீஷ்குமார், வேலைக்காக சென்னையில் முகாமிட்டிருந்தவர். சென்னை குடிபெயர்ந்தவர்களுக்கு ஒரு கட்டத்தில் தோன்றும் அதே எண்ணம் தான், சதீஷிற்கும் தோன்றியது. ‛நாம் ஏன் பிசினஸ் செய்யக்கூடாது...’ என்பது தான் அது. சென்னை அதற்கு சரியாக இருக்கும் என நினைத்த அவர், அதற்கான முயற்சிகளை தொடங்கிய போது, இங்கு செலவு அதிகம், முதலீடும் அதிகம் என்பதை உணர்ந்தார். சொந்த ஊரான கும்பகோணம் சென்று, ஜூஸ் கடை தொடங்க முடிவு செய்தார். 


வழக்கமான கடையாக இல்லாமல், ஏதாவது ஒரு புதுமையோடு முயற்சியை தொடங்க விரும்பினார் சதீஷ். தமிழ்நாட்டில் அதிக பிரசித்தி பெற்ற ஒரே கடை, டாஸ்மாக் கடை தான். அதை ஏன், நமது தீம்மாக எடுக்க கூடாது என முடிவு செய்தார் சதீஷ். டாஸ்மாக் என்பதை ஜூஸ்மாக் என மாற்றினார். டாஸ்மாக் மதுக்கடை பெயர்பலகை போலவே தனது ஜூஸ் கடை போர்டையும் வடிவமைத்தார். ‛மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு’ என்கிற வாசகத்திற்கு பதிலாக ‛பழரசம் நாட்டிற்கு வீட்டிற்கு நன்மை’ என வாசகத்தை மாற்றினார்.




மற்றபடி அப்படியே அச்சு அசல் டாஸ்மாக் போர்டு மாதிரியே, ஜூஸ் மாக் போர்டும் இருந்தது. கடை திறந்த 3 மாதத்தில் கொரோனா லாக்டவுன் போடப்படுகிறது. எல்லா கடைகளும் அடைக்கப்படுகிறது. டாஸ்மாக் கடை மட்டும் திறந்திருக்கிறது. இதை பார்த்த சதீஷிற்கு இன்னும் ஆத்திரம். ஒரு ஊர்ல எத்தனை டாஸ்மாக் கடை இருக்கிறதோ... அத்தனை ஜூஸ் மாக் திறக்க வேண்டும் என்கிற உறுதியை எடுத்துக் கொண்டார்.  ஊரடங்கிற்கு பின்னால் ஜூஸ்மாக் திறக்கப்பட்டு, வியாபாரத்தில் சக்கை போடு போட்டது. 


கும்பகோணம் மாதிரியான ஊரில், இன்னொரு கிளை திறக்கும் அளவிற்கு ஜூஸ்மாக் பேமஸ் ஆனது. இன்று கும்பகோணத்தில் டாஸ்மாக் அளவிற்கு ஜூஸ்மாக்கிலும் விற்பனை ஜோராக நடக்கிறது. அதற்கு காரணம் விலை. ரூ.20 முதல் ரூ.50 வரை மட்டுமே பழரசங்களின் விலை. இதனால் இன்றும் கூட்டம் அலைமோதுகிறது. 


இது தொடர்பாக ஜூஸ்மாக் நிறுவனம் சதீஷிடம் கேட்ட போது,





‛‛டாஸ்மாக்கிற்கு அரசாங்கமே அவ்வளவு முக்கியத்துவம் தர்றாங்க... அந்த ஒரு கடைக்கு இவ்வளவு கிராக்கி இருக்கு... அதை மாத்தணும்னு நெனச்சேன். அந்த பிராண்ட்டை வெச்சே, அதற்கு நேர் எதிர் வியாபாரத்தை செய்ய முடிவு செய்தேன். அதுல பிறந்தது தான் ஜூஸ் மாக். ஒரு டாஸ்மாக்கில் என்னவெல்லாம் இருக்குமோ, அதெல்லாம் இங்கு இருக்காது. இங்கு பெண்கள் தான் பணியாற்றுவாங்க. குடும்பத்தோடு இந்த கடைக்கு வரலாம். இங்குள்ள பழரசத்தை குடித்தால் உடலுக்கு நல்லது... இப்படி பல பிளஸ் பாயிண்ட்டுகளை டாஸ்மாக்கை விட ஜூஸ்மாக் பெற்றிருக்கிறது. எப்படி வியாபாரம் ஆகுதுன்னு கேட்டீங்கன்னா... நான் பல கிளைகளை திறந்து கொண்டிருக்கிறேன்... இது தான் என்னோட வியாபார வெற்றி. டாஸ்மாக் கடை மாதிரியே ஜூஸ் மாக் கடையும் தமிழ்நாடு முழுக்க திறக்கணும்; அது தான் என்னோட ஆசை!‛‛ என்றார். 


டாஸ்மாக் என்கிற பதிந்து போன வார்த்தையை, பதமாக பயன்படுத்தி, தன் யுக்தியில் வெற்றி பெற்றிருக்கும் சதீஷ் போன்றோர், சிறு தொழிலிலும் நுண்ணறிவு கை கொடுக்கும் என்பதை நிரூபித்துள்ளனர். டாஸ்மாக் கடைக்கு போட்டியாக ஜூஸ் மாக் வரட்டும்... வாழ்த்துக்கள்!!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண