பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றிக்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சி இந்த வெற்றியின் தருணத்தைப் பயன்படுத்தும் விதமாக தென் மாநிலங்களில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. 


தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கேரளா, புதுச்சேரி , அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், லட்சத் தீவுகள் ஆகிய மாநிலங்களில் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத் பாரதி தெரிவித்துள்ளார். 


தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சி நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. மேலும், கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களிலும் களம் கண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, இதுவரை பெரியளவிலான ஈர்ப்பையோ, வெற்றியையோ பெற்றது இல்லை. இந்நிலையில் தமிழ்நாடு உள்பட பல்வேறு தென்மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது. 



ஆம் ஆத்மி கட்சியினர் - தமிழ்நாடு


ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத் பாரதி, `பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ள பெரு வெற்றிக்குப் பிறகு, தென்மாநிலங்களில் இருக்கும் மக்கள் பலரும் எங்கள் கட்சியின் அரசியல் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். தென் மாநிலங்களில் இருந்து எங்களுக்கு பலத்த வரவேற்பு வந்திருக்கிறது. மக்களின் மனநிலையைக் கணக்கில் கொண்டு, தென் மாநிலங்கள் முழுவதும் உள்ள எங்கள் பொறுப்பாளர்களை வைத்து மாபெரும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடவுள்ளோம்’ என்று கூறியுள்ளார்.  


தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கேரளா, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், லட்சத் தீவுகள் முதலான மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத் பாரதி, `ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து, இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தி, புரட்சியில் அங்கம் வகிக்க விரும்புவோர் அனைவரையும் அழைக்கிறேன்’ எனக் கூறியுள்ளார். 



தென்மாநிலங்கள் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளவும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது. தெலங்கானாவில் வரும் ஏப்ரல் 14 அன்று அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபயணத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து சட்டமன்றத் தொகுதியிலும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். `இந்த நடைபயணத்தின் மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியலையும், பாபாசாகேப் அம்பேத்கர், பகத் சிங் ஆகியோரின் கொள்கைகளையும் அப்பகுதி மக்கள் அனைவரிடமும் எடுத்துச் செல்வோம்’ என்கிறார் சோம்நாத் பாரதி. 


டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைச் சுட்டிக் காட்டி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடவுள்ளதாகக் கூறியுள்ளது. 


தமிழ்நாட்டைப் போலவே, ஆம் ஆத்மி கட்சி கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களிலும் பங்கேற்று படுதோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.