அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு கழகத்தின் ஜே.எம்.பஷீர் இன்று வௌியிட்ட அறிக்கை அ.தி.மு.க.வில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளியிட்ட அறிக்கையில், இஸ்லாமியர்களுக்கு மாபெரும் துரோகம் இழைத்த எடப்பாடி. ஆதாரத்துடன் வெளியிட உள்ளேன். தொடர்ந்து இஸ்லாமிய துரோகி எடப்பாடி பழனிசாமியை கழகத்தை விட்டு நீக்கச்சொல்லி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்து பேட்டி அளிக்க உள்ளேன் என்று திடீரென இன்று காலை அறிக்கையை வெளியிட்டார்.
ஏற்கனவே சசிகலாவின் சுற்றுப்பயணத்தால் கட்சித் தலைமை மிகவும் சிரமத்தை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இஸ்லாமியர்களுக்கு முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி துரோகம் இழைத்துவிட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது கடும் அதிர்ச்சியை கட்சியினர் மத்தியில் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“ கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் வகையில் செயல்பட்ட காரணத்தினாலும், தென்சென்னை வடக்கு(மேற்கு) மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.எம்.பஷீர் (கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளர்) இன்றுமுதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கோள்கிறோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா இல்லாமல் முதன்முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அதிமுக 66 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் பங்கேற்காத சசிகலா ஆடியோவாக வெளியிட்டுக்கொண்டிருந்த நிலையில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவது அதிமுக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சூழலில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.பி.எஸ்.ராஜா திடீரென அமமுக பொதுச்செயலாளர் தினகரனைச் சந்தித்ததும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து கட்சியின் தலைமைக்கு இன்னல்களை அளிக்கும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் சூழலில், தற்போது கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் முன்னாள் முதல்வர் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அழித்துக்கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியிருப்பதும் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்