முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.


ஜெயலலிதா நினைவுநாள்:


கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்தார். அவரது மறைவு செய்தி இந்திய அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்றளவும் ஜெயலலிதா மரணம் நம்ப முடியாத ஒரு நிகழ்வாக தமிழக மக்களிடத்திலும் உள்ளது. அவரது மறைவுக்குப் பின் அதிமுக கட்சியில் நிகழ்ந்த ஏகப்பட்ட பிரச்சனைகள் தொண்டர்களிடையையும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. 


சமீபத்தில் கூட அதிமுக மீண்டும் ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்தது. இதில் ஏராளமான தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர். இதனால் ஓபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கருப்பு சட்டை அணிந்து அமைதி ஊர்வலமாக சென்று, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.






எடப்பாடி உறுதிமொழி:


பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது மக்களை ஏமாற்ற விட மாட்டோம். பொம்மை முதலமைச்சரே உங்கள் போலி முகத்தை வெளிக்காட்டுவோம். குடும்ப ஆட்சியின் கொள்ளைக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்புவோம்.நாம் கொண்ட கொள்கையில் லட்சியத்தோடு, வீறுநடை போடுவோம்; எதிரிகளை விரட்டியடிப்போம்; துரோகிகளை தூள் தூளாக்குவோம் என தெரிவித்தனர். 


எடப்பாடிக்கு அழைப்பு விடுத்தாரா ஓ.பி.எஸ்.?


இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் மேடையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது ஜெயலலிதாவை மீண்டும் பொதுச்செயலாளர் ஆக்குவோம் என்றும், ஒற்றுமை காப்போம். ஒருங்கிணைவோம். திமுகவின் மக்கள் விரோத செயலை மக்களிடம் சொல்வோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே களப்பணிகள் தொடங்குவோம். சர்வாதிகார போக்குக்கு முடிவு கட்டுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 


ஒற்றுமை காப்போம். ஒருங்கிணைவோம் என்பதன் மூலம் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஓ. பன்னீர்செல்வம் அழைப்பு விடுக்கிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.