ஈபிஎஸ் – ஓபிஎஸ் என்ற சுயநலவாதிகளுடன் சேர்ந்து செயல்பட முடியாது என்று கூறி அதிமுகவில் இருந்து திடீரென விலகியிருக்கும் கோவை செல்வராஜ் திமுகவில் இணையப்போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.


கோவை செல்வராஜ் விலகல்:


ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஒன்றிணைந்த ஓபிஎஸ் – ஈபிஸ் அணிகள் மீண்டும் பிரிந்தபோது ஓபிஎஸ் அணிக்கு சென்ற கோவை செல்வராஜ் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக தாக்கி பேசி வந்தார். இந்நிலையில், திடீரென அவர் ஓபிஎஸ் மீதும் குற்றஞ்சாட்டி விலகியது அந்த அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தொடக்கத்தில் காங்கிரஸ் இருந்த கோவை செல்வராஜ் கடந்த 1991 – 96ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலக்கட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக பதவி வகித்தவர். அப்போது, காங்கிரஸ் தலைமையிடன் ஏற்பட்ட கருத்து மோதலால் ஜெயலலிதா ஆதரவாளராக மாறி, காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏவாக சட்டமன்றத்தில் செயல்பட்டார்.  ஜெயலலிதாவிற்கு ஆதரவாக அவர் செயல்பட்டதால் ‘ஜெயா காங்கிரஸ் எம்.எல்.ஏ’ என்று அப்போது அவர் வர்ணிக்கப்பட்டார்.


அ.தி.மு.க.வில் இருந்து விலகல்:


சட்டமன்ற உறுப்பினர் பதவி காலம் முடிந்ததும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.  ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிகள் இரண்டாக பிரிந்தபோது, கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து அவரது அணியில் தொடர்ந்தார். அப்போது அவருக்கு மாநில செய்தித் தொடர்பாளர் பதவி தரப்பட்டது. ஆனால், அவர் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு கேட்டும் அதனை எடப்பாடி பழனிசாமி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியில் இருந்தவர், ஓபிஎஸ் கட்சியை விட்டு நீக்கப்பட்டு தனி அணியாக செயல்பட்ட நிலையில், அவருடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி தரப்பை கடுமையான வார்த்தைகள் தாக்கி பேசி வந்தார். 


இந்நிலையில், திடீரென ஓபிஎஸ் மீதும் குற்றச்சாட்டுகளை கூறி அவர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. வெளிப்படையாக பேட்டியோ அறிக்கையோ கொடுக்காமல், ஆடியோ ஒன்றை மட்டும் வெளியிட்டு விட்டு அதிமுகவை விட்டு விலகுவதாக அவர் அறிவித்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.


தி.மு.க.வில் இணைய திட்டமா..?


கோவை செல்வராஜ் ஆடியோ வெளியிட்ட நாளில் இருந்து இன்று வரை அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருக்கிறது. மறைமுகமாக அமைச்சர் செந்தில்பாலாஜி மூலமாக திமுகவில் இணைய கோவை செல்வராஜ் காய்கள் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி சென்று திரும்பி வந்த சில நாட்களில் அவரை சந்தித்து முறைப்படி திமுகவில் கோவை செல்வராஜ் இணைவார் என கூறப்படுகிறது. 


இதே நேரத்தில், கோவை செல்வராஜ் எங்களைவிட்டு செல்லமாட்டார் மீண்டும் எங்கள் அணிக்கே திரும்ப வருவார் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.


டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர்...! பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் மாலையில் பங்கேற்பு..!