விஜய் எங்களுக்கு எதிரி கிடையாது எனவும் பாஜக பீகாருக்கு மட்டும் நிதி ஒதுக்கியுள்ளது கண்டிக்கத்தக்கது எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார் தவெக தலைவர் விஜய்.


இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தவெகவின் இரண்டாம் ஆண்டு விழா இன்று நடக்கிறது. அதற்கு நான் வாழ்த்துகள் தான் சொல்ல முடியும். இரண்டு ஆண்டு குழந்தைக்கு எனது வாழ்த்துகள். தேர்தலை பொறுத்தவரை பல மாதங்கள் இருக்கு. யார் யாருடன் கூட்டணி என்று இப்போது நான் சொல்ல முடியாது. அப்போது முடிவு பண்ணி கட்சி சொல்லும். விஜய் எங்களுக்கு எதிரி கிடையாது. எங்களை பொறுத்தவரை அவர் எதிரி இல்லாத சூழ்நிலையில் ஏன் நாம் விமர்சனம் செய்ய வேண்டும். தேவையில்லாதது.


பாஜகவை பொறுத்தவரை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றுதான் சொல்லியிருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் எந்த மாற்றமும் இல்லை. பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் பற்றி ஒரு வார்த்தையாவது இருக்கா? கிடையாது. தமிழை மட்டும் வாசிக்கிறீங்க. தமிழ்நாட்டுக்கு என்ன செய்தீர்கள். போன முறை ஆந்திர பிரதேசத்திற்கும் பீகாருக்கு மட்டும் அள்ளி அள்ளி கொடுத்தீங்க. இந்தியாவில் இரண்டு மாநிலங்கள்தான் இருக்கா?


அண்ணா சொன்னமாதிரி, வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது. 2025ஆம் ஆண்டு தேர்தல் நடக்க உள்ளதால் பீகாருக்கு ஏராளமான திட்டங்கள். அவர்கள் வாக்குகளை பெற பாஜக அரசு இதுபோன்று செய்கிறது. அதற்கு மக்கள் வரிப்பணம் தான் கிடைத்ததா? சொந்தமாக பாஜக நிதியை எடுத்து கொடுங்க. ” எனத் தெரிவித்தார்.