DGP on Kalpana Nayak Issue: கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை என டிஜிபி அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறையின் கூடுதல் டிஜிபி-யாக பொறுப்பு வகிக்கும் கல்பனா நாயக்கின் எழும்பூர் அலுவலகத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீ விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக அந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கூடுதல் டிஜிபி-ஐ கொலை செய்ய சதி.?
இந்த நிலையில், தன்னுடைய அறையில் நிகழ்ந்த தீ விபத்து, தன்னை கொல்வதற்காக நடந்த சதியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக, தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த தகவல் வெளியாகி, காவல்துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
Just In




சதி நடக்கவில்லை என டிஜிபி அலுவலகம் விளக்கம்
நிலைமை இப்படி இருக்க, இச்சம்பவம் தொடர்பாக டிஜிபி அலுவலகம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கூடுதல் டிஜிபி கல்பனா நாயக்கின் கடிதம் கிடைக்கப்பெற்ற உடன், அது குறித்து உடனடியாக தீவிர விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டு, காவல் ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் நடந்த அன்றே எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டதாகவும், உடனடியாக திருவல்லிக்கேணி துணை ஆணையர், தடயவியல் நிபுணர்கள், மின்சாரத்துறையிலிருந்து நிபுணர்கள், காவலர் குடியிருப்பு வாரிய அதிகாரிகள், ப்ளு ஸ்டார் நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், வழக்கு மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு, அதைத் தொடர்ந்து நடந்த விரிவான விசாரணையில், 31 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், தீ விபத்திற்கான காரணங்களை ஆராய, தடயவியல், தீயணைப்புத்துறை மற்றும் மின்சாரத்துறை நிபுணர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிபுணர்களின் அறிக்கைகள் கிடைத்துள்ளதாகவும், காப்பர் வயரில் ஏற்பட்ட உராய்வே காரணம் என தெரியவந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தடயவியல் நிபுணரின் அறிக்கைப்படி, சம்பவ இடத்தில் பெட்ரோல், டீசல் உள்பட எந்த எளிதில் தீப்பிடிக்கும் ரசாயனம் இருந்ததற்கான தடயம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை நடந்துள்ள விசாரணைகளின்படி, வேண்டுமென்றே தீப்பற்ற வைத்ததற்கான அறிகுறிகள் இல்லை என்றும், கூடுதல் டிஜிபி கல்பனா நாயக்கின் உயிருக்கு திட்டமிட்ட அச்சுறுத்தல் இருப்பதற்கான ஆதாரமும் இல்லை எனவும் டிஜிபி அலுவலகம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.